`உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றில் இன்று கறுப்புநாள்' - பிரசாந்த் பூஷண் கருத்து

நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம், இன்று தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்புக்கு கருத்துக்கூறிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், இன்றைய நாள் `உச்ச நீதிமன்ற வரலாற்றில் கறுப்பு நாள்' என்று தெரிவித்தார். 

பிரசாந்த் பூஷன்

குஜராத்தில் கடந்த 2005-ம் ஆண்டு நடத்தப்பட்ட சொராபுதீன் சேக் போலி என்கவுன்டர் வழக்கை விசாரித்தவர் சி.பி.ஐ-யின் சிறப்பு நீதிபதி பி.ஹெச்.லோயா. அந்த வழக்கில், அப்போதைய மாநில உள்துறை அமைச்சராக இருந்தவரும் தற்போதைய பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவின் பெயரும் அடிப்பட்டது. வழக்கு நடந்த சமயத்தில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் உள்ள நண்பர் ஒருவரின் இல்லத் திருமணத்துக்குச் சென்ற நீதிபதி லோயா மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது மரணத்துகுப் பின் வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமித்ஷாவை விடுதலை செய்தது. இதையடுத்து காங்கிரஸ், சி.பி.எம், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் லோயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டன. 

லோயா மரணம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று விசாரித்து தீர்ப்பு அறிவித்தது. அதில் `நீதிபதி லோயா மரணத்தில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால், சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை' என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது. 

உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்புக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் 'உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இன்றைய நாள் உச்ச நீதிமன்ற வரலாற்றில் கறுப்பு நாள்' என்று விரக்தியாகக் கூறினார். இவர், நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சுதந்திரமாக விசாரணை வேண்டும் என்று வலியுறுத்திய மனுதாரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!