“பிரதமர் நாடு திரும்பும்வரை உண்ணாவிரதம்!’’ கத்துவா சிறுமிக்காகப் போராடும் ஸ்வாதி மலிவால் #BetiKhatreMeinHai

புதுடெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவரான ஸ்வாதி மலிவால், உன்னாவ் மற்றும் கத்துவா சிறுமி வழக்கில் நியாயம் கிடைக்க, ஆறு நாள்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகிறார்.

“பிரதமர்  நாடு திரும்பும்வரை உண்ணாவிரதம்!’’ கத்துவா சிறுமிக்காகப் போராடும் ஸ்வாதி மலிவால்  #BetiKhatreMeinHai

ஸ்வாதி மலிவால்

த்துவா சிறுமி பாலியல் வன்முறை விவகாரம், நம் நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையையும் பாதுகாப்பின்மையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

கடந்த ஜனவரி 10-ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா மாவட்டத்தில் வசிக்கும் பகெர்வால் என்ற நடோடி சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, காணாமல்போனார். ஒரு வாரம் கழித்து, அதே பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார் என்று தெரியவந்தது.

இதேபோல, 2017 ஜூன் 4-ம் தேதி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, பா.ஜ.க கட்சியின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் சென்கர், தன்னை பாலியல் வன்முறை செய்ததாகப் புகார் எழுப்பினார். அந்தச் சிறுமியின் தந்தை காவல்துறையினரால் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டு, மர்மமான முறையில் உயிரிழந்தார்.

நாடு முழுவதும் உள்ள பெண்கள் அமைப்பாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள், பெண்களின் பாதுகாப்புக்கு தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், புதுடெல்லி பெண்கள் ஆணையத்தின் (Delhi commission for women chairperson) தலைவரான ஸ்வாதி மலிவால், உன்னாவ் மற்றும் கதுவா சிறுமி வழக்கில் நியாயம் கிடைக்கவும், பெண்களின் பாதுகாப்புக்குத் தீவிரமான செயல்திட்டங்களை அமல்படுத்த சில ஆலோசனைகளைப் பட்டியலிட்டும் மத்திய அரசின் கவனம் ஈர்க்கும் வகையில், ஆறு நாள்களாக டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகிறார்.

ஸ்வாதி மலிவால்

”இப்படி ஒரு நெருக்கடியான சூழ்நிலையில், பிரதமர் வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறார். அவர் இந்தியாவுக்குத் திரும்பி, என்னுடன் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தும் வரை என் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்வேன்” என்கிறார் ஸ்வாதி மலிவால்.

ஸ்வாதி மலிவால், 2015-ம் ஆண்டு முதல், டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றிவருகிறார். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த இவரின் நியமனம் மீதே சர்ச்சை எழுப்பப்பட்டது. ஆனால், ஸ்வாதி மலிவால் பதவியேற்றது முதல், பெண்களின் பாதுகாப்பு குறித்து பொதுஇடங்களில் பேசியும், போராட்டம் நடத்தியும் வருகிறார். 2017-ம் ஆண்டு, 'ஏன் டெல்லி பாலியல் வன்முறையின் தலைநகரமாக இருக்கிறது?' என்ற தலைமையில் இவர் ஆற்றி உரை, சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றது. தற்போது, கத்துவா மற்றும் உன்னாவ் பாலியல் வன்முறை வழக்குகள் முக்கியத்துவம் பெற்றிருக்கும் நிலையில், ஸ்வாதி மலிவால் மத்திய அரசுக்கு சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியிருக்கிறார். அவை...

*எந்தவொரு பாலியல் வன்முறை வழக்கையும் வேகமாக விசாரித்துத் தீர்ப்பு அளிக்க வேண்டும். அதற்காக, விரைந்து விசாரிக்கும் நீதிமன்றங்கள் ( fast track courts) அமைக்கப்பட வேண்டும். 

*டெல்லி காவல்துறையில் உள்ள காவலர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, காவல்துறையில் நிலவும் 66,0000 காவலர்களின் காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

*நிர்பயா நிதியின் மூலம் போதுமான காவலர்கள் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும். 

*பாலியல் வன்முறை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆறு மாதத்துக்குள் மரண தண்டனை விதிக்க வேண்டும். 

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவருகிறார் ஸ்வாதி மலிவால். இதற்கிடையில், லண்டன் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, பாலியல் வன்முறை குறித்து பேசியிருக்கிறார். "பாலியல் வன்முறையை அரசியல் ஆக்காதீர்கள். எங்கள் மகள்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை எப்படி எங்களால் பொறுத்துக்கொள்ள முடியும்? நம் மகன்களுக்குத்தான் பெண்களுக்கு எப்படி மரியாதை அளிக்க வேண்டும் என்று கற்றுத்தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!