சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதம் தொடங்கினார் சந்திரபாபு நாயுடு..!

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, தனது பிறந்தநாளான இன்று சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார்.

சந்திரபாபு நாயுடு

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மத்திய பட்ஜெட்டில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ஆந்திர அரசு, மத்திய அரசுக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றன. மேலும், தேசிய ஜனநாயக் கூட்டணியிலிருந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி விலகியது. தொடர்ந்து, அக்கட்சியின் எம்.பி-க்கள் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமாசெய்தனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மத்திய பா.ஜ.க அரசுமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் இந்தத் தீர்மானத்துக்கு, தெலுங்கு தேசம் கட்சியும் ஆதரவளித்தது. இந்த விவகாரம் தொடர்பாக, ஆந்திரக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 16-ம் தேதி, ஆந்திராவின் பிரத்யேகா ஹோடா சாதனா சமிதி என்ற அமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு, பல்வேறு கட்சியினரும் ஆதரவளித்திருந்தனர். ஆனால் சந்திரபாபு நாயுடு, முழு அடைப்பினால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிப்படையும் எனக் கூறி போராட்டத்தை எதிர்த்தார். இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஏப்ரல் 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என  முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னதாக அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை, விஜயவாடாவில் அவரது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இன்று, சந்திரபாபு நாயுடுவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!