காஷ்மீர் சிறுமிக்கு நீதி கேட்டு பா.ஜ.க இணையதளம் முடக்கம்..!

காஷ்மீர் சிறுமிக்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, காஷ்மீர் மாநில பா.ஜ.க இணையதளத்தை ஹேக்கர்ஸ் முடக்கினர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி, 8 பேர் கும்பலால், ஜனவரி மாதத்தில் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. மேலும், குற்றவாளிகளுக்கு உடனடியாக கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநில பா.ஜ.க-வின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது.

ஹேக் செய்யப்பட்ட இணையதளம் உடனடியாக சரிசெய்யப்பட்டது. 'டீம் கேரளா சைபர் வாரியர்ஸ்' எனத் தங்களை அழைத்துக்கொள்ளும் ஹேக்கிங் குழு, இணையதளத்தை ஹேக்கிங் செய்துள்ளதாகத் தெரிகிறது. 'வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி வேண்டும்' என்ற வாசகம் இணையத்தில் வெளியிடப்பட்டது. பாலியல், துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட கும்பலை மாநில பா.ஜ.க ஆதரிக்கிறது எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்திய தேசியக்கொடியின் வண்ணங்களைப் பயன்படுத்தி தகவலை வெளியிட்டுள்ள ஹேக்கர்கள், 'மனித நேயத்துக்கு அப்பால் எதுவும் இருக்கக் கூடாது, பாகுபாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும்' என்ற தகவல்களையும் இணையத்தில் பதிவுசெய்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்த காஷ்மீர் மாநில பொதுச் செயலாளர் அசோக் கவுல், 'ஹேக் செய்யப்பட்ட இணையதளம் தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டது. நாங்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். வடக்கு கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஹேக் செய்திருக்கலாம் என்று தெரிகிறது' என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!