வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (20/04/2018)

கடைசி தொடர்பு:16:50 (13/07/2018)

எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான பெண்களுக்கு எதிரான வழக்குகள்..! முதல் இடத்தில் பா.ஜ.க

இந்தியாவில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீது பதிவாகியுள்ள பெண்களுக்கு எதிரான வழக்குகளில், பா.ஜ.க முதல் இடம் பிடித்துள்ளது.

பாலியல் தொல்லை

சில நாள்களுக்கு முன்னர், உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட  விவகாரத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்கர் கைதுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிக்கிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் புள்ளிவிவரங்களைத் தேசிய தேர்தல் கணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பினர் ஆராய்ந்து தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இந்தியாவில் உள்ள 4,845 நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வேட்புமனு தாக்கலின்போது அளித்த பிரமாணப் பத்திரங்கள் ஆய்வுசெய்யப்பட்டன. அதில் 1,580 பேர்மீது கிரிமினல் குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில், பெண்களுக்கு எதிரான வழக்குகள் 48 பேர்மீது பதிவாகியுள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்களின்படி பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் முதல் இடத்தில் இருப்பது, பா.ஜ.க. பா.ஜ.க-வைச் சேர்ந்த 3 எம்.பி-க்கள் மற்றும் 12 எம்.எல்.ஏ-க்கள் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தில் சிவசேனா கட்சியும். மூன்றாவது இடத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியும், நான்காவது இடத்தில் தெலுங்கு தேசம் கட்சியும், ஐந்தாவது இடத்தில் காங்கிரஸும் உள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க கட்சியினர்மீது 2 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 5 வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களில், மொத்தம் 327 வேட்பாளர்கள்மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகள் உள்ளதை அறிந்தும், அந்தக் கட்சிகளின் வேட்பாளர்களைத் தேர்தலில் போட்டியிட அனுமதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.