வெளியிடப்பட்ட நேரம்: 10:44 (20/04/2018)

கடைசி தொடர்பு:10:57 (20/04/2018)

அமெரிக்க Vs சீனா... இந்தியாவை அசைத்துப் பார்க்கப்போகும் வர்த்தகப் போர்!

அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இந்தியப் பொருளாதாரமும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளதாகவும், அது இந்தியாவின் அரசியல் நிலைத்தன்மையையே அசைத்துப் பார்த்துவிடும் என்றும் சர்வதேசப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க Vs சீனா... இந்தியாவை அசைத்துப் பார்க்கப்போகும் வர்த்தகப் போர்!

மெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இந்தியப் பொருளாதாரமும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளதாகவும், அது இந்தியாவின் அரசியல் நிலைத்தன்மையையே அசைத்துப் பார்த்துவிடும் என்றும் சர்வதேசப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வர்த்தகப் போர்

கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி, சீனாவின் மீது இறக்குமதி வரியை விதித்து வர்த்தகப் போரை அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள்மீது 50 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கா விதித்த புதிய வரி விதிப்பினால் சீனா கடும் அதிர்ச்சியடைந்தது. இதற்குப் பதிலடியாக அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதியாகும் பொருள்கள் மீது 3 பில்லியன் டாலர் அளவுக்கு வரி விதித்தது சீன அரசாங்கம். இந்த இரு நாடுகள் இடையேயான வர்த்தகப் போர் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வர்த்தகப் போர் ஏன்?

சீனாமீது அமெரிக்கா வர்த்தகப் போர் தொடுக்க முக்கியக் காரணமாக சொல்லப்படுவது, வர்த்தகப் பற்றாக்குறை. தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 375 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கிறது. சீனாவிலிருந்து 506 பில்லியன் டாலர் அளவுக்குப் பல்வேறு பொருள்களை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. ஆனால், அமெரிக்காவோ சீனாவுக்கு 130 பில்லியன் டாலர் அளவுக்கு மட்டும் பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள், ஜவுளி மற்றும் இயந்திரங்களைச் சீனாவிலிருந்து எக்கச்சக்கமாக இறக்குமதி செய்கிறது அமெரிக்கா. ஆனால், சீனாவோ சில வகையான பழங்கள், மாட்டு இறைச்சி, ஸ்டீல் பைப் போன்ற மிகச் சில பொருள்களையே அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்கிறது.

வர்த்தகப் போர்

இந்த நிலையில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையை 100 பில்லியன் டாலர் என்கிற அளவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இலக்காக உள்ளது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்குக்கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அதன் காரணமாகவே சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள்மீது 50 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கா புதிய வரிகளை விதித்தது.

இந்தியாவுக்கு எப்படி பாதிப்பு?

பதிலுக்கு சீனாவும் சில பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த வர்த்தகப் போர் உலகின் பல்வேறு நாடுகளில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தப் போரினால் இந்தியப் பொருளாதாரமும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளதாக சர்வதேச அளவில் பிரபலமான ரபோ வங்கியின் (Rabobank) பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வர்த்தகப் போரினால் இந்தியாவின் ஏற்றுமதிகள் குறைந்து, இறக்குமதி பணவீக்கத்துக்கு வழிவகுப்பதோடு, அது இந்தியாவின் வாங்கும் சக்தி மற்றும் முதலீடுகளைப் பாதிக்கும். அதாவது, 2022-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.3 விழுக்காட்டை இழக்கும் என்று கூறும் அவர்கள், கீழ்க்கண்ட 3 காரணங்களினால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்கிறார்கள்....

* அமெரிக்காவின் கூட்டாளியாக இந்தியா இருப்பதாக சீனா கருதுவதால், அந்த நாடு இந்தியாவின் ஏற்றுமதிகளைக் குறி வைக்கும்.

* அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்துக்கு ஆதரவான நிலையை இந்தியா மேற்கொள்ளாததால், இந்தியாவின் ஏற்றுமதிகளை அந்த நாடு தவிர்க்கலாம்.

* இதனால், அமெரிக்காவுக்கு எதிரான பதில் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளும்.

* கடைசியில், பாதிக்கப்படப்போவதென்னவோ இந்தியாவின் பொருளாதாரம்தான்.

வர்த்தகப் போர்

அரசியல் ஸ்திரமின்மை, அந்நிய முதலீடு பாதிப்பு

உலக நாடுகளின் மொத்த ஏற்றுமதியில் வெறும் 1.7 விழுக்காடு மட்டுமே இந்தியாவினுடையது. எனவே, இந்த வர்த்தகப் போரினால் பாதிக்கப்பட மாட்டோம் என்ற இந்தியாவின் வாதம், மேற்கூறிய காரணங்களினால் அடிபட்டுப் போகிறது.

மேலும், தற்போதைய வர்த்தகப் போர் ஒருபுறமிருந்தாலும் அமெரிக்காவின் நிதிக் கொள்கை, எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக கடுமையாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனால், 2022-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவுக்கான அந்நிய முதலீடு வரத்து சுமார் 22 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்புக்கு உள்ளாகும். இது, நிலைமையை மேலும் மோசமாக்கி, இந்தியாவின் அரசியல் ஸ்திரத்தன்மையையும் பாதிக்கும். அப்படி ஒரு சூழல் உருவானால், இந்திய ரூபாயின் மதிப்பு மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்து, 2022-ல் இந்தியாவின் மூலதன வரத்து சுமார் 32 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பைச் சந்திக்கும்.

அத்தகைய நிலைமையில் இந்தியா, தனது அந்நியச் செலாவணி கையிருப்பைப் பயன்படுத்தினால், பணப்புழக்கம் குறைந்து வட்டி விகிதம் குறையும். இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தற்போது கணிசமாக உள்ளபோதிலும், மேலும் வீழ்ச்சி வருவதற்கான வாய்ப்பு இருப்பதால், சந்தைகள் இன்னும் கவலை அளிப்பதாக மாறும்.

மொத்தத்தில், இந்த நிகழ்வுகள் யாவும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய வேகத்தடைகளை ஏற்படுத்திவிடும் என்றும் அந்த வங்கியின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா தப்பிக்க வழி உள்ளதா?

இருப்பினும், இந்த வர்த்தகப் போரினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து இந்தியா தப்பிக்க என்ன வழி இருக்கிறதா என்றால், ஓரளவுக்கு உள்ளது என்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன்

அனந்த நாகேஸ்வரன்இதுதொடர்பாக அவர் நாணயம் விகடனுக்கு அளித்த பேட்டியில், ``உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பலப்படுத்த இந்தியா பல விஷயங்களைச் செய்ய வேண்டும். இந்தியாவின் தேசிய சேமிப்பு விகிதம் குறைந்து வருகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தச் சேமிப்பு விகிதம் 9% குறைந்திருக்கிறது. சேமிப்பு குறைவதற்குக் காரணம், அரசாங்கம் எளிதில் அளிக்க வேண்டிய சில விஷயங்களை மக்கள் அதிக விலை தந்து வாங்குவதே. மக்களுக்குச் செய்து தரவேண்டிய பல வசதிகளை மத்திய, மாநில, உள்ளூர் அரசாங்கங்கள் சரியாக நிறைவேற்றித் தரவில்லை. எனவே, திறமையான நிர்வாகத்தை முதலில் உருவாக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசாங்கங்கள் நிலத்தின் மூலமான உற்பத்தியைப் பெருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானப் பரப்பு விகிதம் (Floor Space Index) உருவாக்கப்பட வேண்டும். நிலத்தை எளிதில் மாற்றிப் பயன்படுத்துகிற மாதிரி விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தற்போது அதிக அளவில் லஞ்சம் இருப்பதை மாற்றியமைக்க வேண்டும். சுருக்கமாக, வர்த்தகப் போர் பற்றி அதிகம் கவலைப் படாமல், உற்பத்தியைப் பெருக்கி, வருமானத்தை உயர்த்தி, சேமிப்பை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்