வெளியிடப்பட்ட நேரம்: 16:01 (20/04/2018)

கடைசி தொடர்பு:16:01 (20/04/2018)

`சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு!' - சட்டத் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்குத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கடிதம் அளித்துள்ளது.

உச்சநீதிமன்றம்

சில காலங்களாகச் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. காஷ்மீர் சிறுமி, உத்தரப்பிரதேசம், உன்னாவ் சிறுமி போன்ற பல சம்பவங்களைத் தொடர்ந்து இதன் மீதான சட்டம் மற்றும் தண்டனைகளைக் கவனிக்கத் தொடங்கியுள்ளனர் மக்கள். மேலும், இது போன்று பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் ஆண்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என மக்களுடைய குரல்கள் ஓங்கி வருகின்றன. 

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதுக்கு எதிராகப் பொது நல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இது தொடர்பாக மத்திய அரசு ஒரு கடிதத்தை அளித்தது. அதில், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கும் வகையில் ‘போஸ்கோ’ சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இந்தவழக்கு ஏப்ரல் 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.