வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (20/04/2018)

கடைசி தொடர்பு:17:05 (20/04/2018)

``ஹர ஹர... சாக்‌ஷி மகராஜ்"... சளைக்காத சர்ச்சைகளின் பின்னணி!

``ஹர ஹர... சாக்‌ஷி மகராஜ்

த்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத்தும், அவரது சகாக்களும் சர்ச்சைகளுக்குப் பெயர்போனவர்கள். இந்த மாநிலத்தின் உன்னாவ் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யான சாக்‌ஷி மகராஜும் சர்ச்சை நாயகர்களின் ஒருவர். தன்னை இந்துத் துறவி எனக் கூறிக்கொள்ளும் இவர், அந்த மாநிலத்தில் பி.ஜே.பி-யின் கொள்கை முடிவுகளை எடுக்கும் மூத்த நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார்.

எப்போதும், சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொல்லிச் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் சாக்‌ஷி மகராஜ், தற்போது லக்னோவில் உள்ள அலிகஞ்ச் என்ற இடத்தில் இரவுநேரக் கேளிக்கை மற்றும் மதுபான விடுதி ஒன்றைத் திறந்து வைத்து மீண்டும் சிக்கலில் மாட்டியிருக்கிறார்.

ராஜஸ்தானில் இவர் ஏற்கெனவே செய்தியாளர்களிடம் பேசியபோது, ``இருசக்கர வாகனம், காரில் செல்லும் காதலர்களும், பூங்கா போன்ற இடங்களுக்குச் செல்லும் காதல் ஜோடிகளும் கட்டிப்பிடித்தவாறு ஒருவரை ஒருவர் விழுங்குவதுபோல் பார்த்துக்கொள்கின்றனர். ஏதேனும், தவறு நடக்கும் முன்பாக அந்த ஜோடிகளைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். பொதுவெளியில் கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பவர்களைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு மக்கள் செல்கின்றனர். ஆனால், பாலியல் வன்கொடுமை நடந்துவிட்டால், நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாரைக் கேட்கின்றனர்'' என்று தெரிவித்த கருத்து, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்வினையை ஏற்படுத்தியது.

மோடி சாக்‌ஷி மகராஜ்

இதேபோல் மற்றொருமுறை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சாக்‌ஷி மகராஜ், ``காந்தியைப் போன்று அவரைச் சுட்டுக்கொன்ற கோட்சேவும் தேசப்பற்று மிக்கவர்தான்'' என்றார். இது, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், நாடாளுமன்ற மக்களவையிலும் வெடித்தது. அப்போது பேசிய சாக்‌ஷி மகராஜ், ``கோட்சே குறித்து பேசியதை நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். கோட்சே, காந்தியைக் கொன்றார். ஆனால், நீங்கள் அவரது சித்தாந்தத்தை 1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையின்போது கொன்றுவிட்டீர்கள்'' என்று எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சி குறித்துப்  பேசினார்.

மேலும், அவர், ``ராமர் கோயில் கட்டும் பணியைத் தடுத்து நிறுத்தும் எந்தச் சக்திக்கும் பூமியில் இடம் இல்லை'' என்றும், ``மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி முடிவதற்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்'' என்றும் தெரிவித்து தொடர் பரபரப்பை ஏற்படுத்தினார்.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது,  ``இந்தியாவின் மக்கள்தொகை அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. அதற்குக் காரணம் முஸ்லிம்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள், 40 குழந்தைகள், 3 விவாகரத்து முறைகளைப் பின்பற்றுபவர்கள்தான். குழந்தைகளைப் பெற்றெடுக்கும் இயந்திரங்கள் அல்ல பெண்கள். இந்துக்களின் மக்கள்தொகை குறைந்தால் நாடு பிளவுபடும்'' என்றார்.

போலீஸார் அடக்குமுறை சம்பவத்தின்போது, இளம்பெண் ஒருவர் காயமடைந்தார். அவருக்கு ஆறுதல் கூறச் சென்ற சாக்‌ஷி மகராஜ், அந்தப் பெண்ணின் ஜீன்ஸ் பேண்டை இறக்கிக் காயங்களைக் காட்டுமாறு சொல்லி மற்றொரு சர்ச்சையில் சிக்கினார். அவரின் இந்த அநாகரிகச் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியது. 

அந்த நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சாக்‌ஷி மகராஜ், ``அந்தப் பெண்ணின் மீதான தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இந்த வழக்கில் போலீஸார் அக்கறை காட்டாவிட்டால், அவர்கள் துப்பாக்கிக் குண்டுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்'' என்றார். 

சாக்‌ஷி மகராஜ்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கேதார்நாத் பயணம் குறித்துப் பேசிய சாக்‌ஷி மகராஜ், ``ராகுல் காந்தி மாட்டிறைச்சி சாப்பிட்டுவிட்டுப் புனிதமான கேதார்நாத் கோயிலுக்குச் சென்றார். இதனால்தான் நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட்டது" என்றும், ``ராகுல் மனநலம் சரியில்லாதவர்; அவருக்கு அரசியல் அரிச்சுவடிகூடத் தெரியாது. கோதுமைக்கும் மக்காச்சோளத்துக்கும் வித்தியாசம் தெரியாத ராகுல் விவசாயிகளின் குறைகளைப் பற்றி வாய்கிழியப் பேசுகிறார்'' என்றும் குறிப்பிட்டு சர்ச்சைகளுக்கு எல்லாம் நாயகனாக விளங்கினார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், ``இந்தியாவில் மதரஸாக்கள்தான் தீவிரவாதத்தை வளர்க்கின்றன'' என்று தெரிவித்து ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டார். 

``நாடு முழுவதும் கல்லறைகளுக்குத் தடைவிதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். அனைத்துச் சமூகத்தினரும் ஒரே இடத்தில் இறந்தவர்களின் உடலை எரியூட்ட வேண்டும்'' என சாக்‌ஷி மகராஜ் கூறிய கருத்தும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. 

சாக்‌ஷி மகராஜ்

உன்னாவ் மக்களவைத் தொகுதி உறுப்பினரான அவர், தன் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பேசுகையில், ``இந்துக்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும்போது, இஸ்லாமியர்களும் அதை விருப்பப்பட்டுச் செய்ய வேண்டும். அனைவருக்கும் ஒரேவிதமான சட்டம் இருக்க வேண்டும். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடு சரியான தீர்வாக அமையும் அனைவருக்கும் பொதுவான சட்டம் இல்லாமல் நாடு முன்னேற்றம் அடையாது. ஒரே மாதிரியான சட்டத்தைப் பின்பற்றாதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தினருக்குப் பாரபட்சம் காட்டக் கூடாது'' என்றார். நாடு முழுவதும் உள்ள மக்களைப் பாதிக்கக்கூடிய வகையிலும், அனைவரின் கவனத்தை ஈர்த்து, அதன் மூலம் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் சாக்‌ஷி மகராஜைப் பொறுத்தவரை தொடர்கதையாகிப் போனது என்றே கூறலாம்.

`சர்ச்சை என்றாலே சாக்‌ஷி மகராஜ்' என்ற ரீதியில் பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினரின் இத்தகைய கருத்துகள் மக்களிடம் கடும் வெறுப்பையே ஏற்படுத்தி வருகின்றன. கட்சி மேலிடம் அவரின் சர்ச்சையான கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே உத்தரப்பிரதேச மக்களின் கோரிக்கையாக உள்ளது...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்