பொதுப் போக்குவரத்தில் பாலியல் தொந்தரவு - இந்தியாவின் நிலை என்ன? | What is the scenario of sexual violences in public transport in India?

வெளியிடப்பட்ட நேரம்: 09:39 (21/04/2018)

கடைசி தொடர்பு:09:39 (21/04/2018)

பொதுப் போக்குவரத்தில் பாலியல் தொந்தரவு - இந்தியாவின் நிலை என்ன?

பொதுப் போக்குவரத்தில் பாலியல் தொந்தரவு - இந்தியாவின் நிலை என்ன?

இந்தியாவில், 'பெண்கள் தனியாகச் செல்ல பாதுகாப்பற்ற நகரம் டெல்லி' என அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியான விஷயமாகத்தான் உள்ளது. குறிப்பாக, போக்குவரத்தின்போது பெண்கள் எவ்வளவு தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள் என்பது விவரிக்க முடியாதது. இந்தியாவில், நூற்றுக்கு 93 பெண்கள் பொதுப் போக்குவரத்தின்போது, சிறு அளவிலான பாலியல் சீண்டல்களில் தொடங்கி பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகிறார்கள்.

இதனாலேயே பெண்கள், வீட்டிலிருந்து நெடுந்தூரம் சென்று அதிக சம்பளத்துக்கு வேலை செய்வதை தவிர்த்துவிட்டு, குறைந்த சம்பளமாக இருப்பினும் உள்ளூரிலேயே வேலை செய்கிறார்கள். இதற்கு பொதுப் போக்குவரத்தினால் ஏற்படும் இன்னல்களே காரணம் என்று கூறுகிறது போக்குவரத்து மற்றும் வளர்ச்சி கொள்கை நிறுவனம் வெளியிட்ட ஆய்வொன்று. வேலைக்குச் செல்லும் பெண்களில் சுமார் 14 விழுக்காட்டினர்  மட்டுமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள். வரும் ஆண்டுகளில், 40 விழுக்காடு பெண்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்கிறது அந்த ஆய்வு.  

உலக வங்கியின் அறிக்கையின்படி 2005ஆம் ஆண்டில் 36.9 விழுக்காடாக இருந்த பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு 2010 இல் 28.6 விழுக்காடாகக் குறைந்தது. 2013 ஆம்  ஆண்டில் இது மேலும் குறைந்து 27 விழுக்காடாகியுள்ளது. 2004 - 2005 மற்றும் 2011-2012 இடையிலான காலகட்டத்தில் மட்டும் பெண் ஊழியர்களின் பங்களிப்பு 19 கோடி குறைந்துள்ளது .

பெண் தொழிலாளர்களின் பங்கு அதிகமாக உள்ள மாநிலம் ஹிமாச்சலப் பிரதேசம்... அதாவது 63 விழுக்காடு. மிகக் குறைவான எண்ணிக்கையிலான பெண் தொழிலாளர்களைக் கொண்ட மாநிலம் பீகார்... அதாவது வெறும் 9 விழுக்காட்டினர் மட்டுமே என்று கூறுகிறது மெக்கின்ஸி என்ற தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக் கழகம். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதிலும், நடந்து வேலைக்குச் செல்வதிலும் ஆண்களின் எண்ணிக்கையவிட பெண்களின் எண்ணிக்கையே அதிகம். நகரங்களில் 37 விழுக்காடு பெண்கள் நடந்தே வேலைக்குச் செல்கிறார்கள். இது ஆண்களோடு ஒப்பிட்டால் 10 விழுக்காடு அதிகமாகும். அதேபோல் பொதுப் போக்குவரத்தை 25 விழுக்காடு ஆண்கள்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால், 30 விழுக்காடு பெண்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

பொதுப் போக்குவரத்தைப் பெண்கள் பயன்படுத்துவதற்குப் பயப்படுகிறார்கள். இதற்குக் காரணம் பாலியல் தொந்தரவுகள்தானென்று கூறுகிறது போக்குவரத்து மற்றும் வளர்ச்சி கொள்கை நிறுவனம். 'உலக அளவில், பெண்களுக்குத் தொல்லை தரும் மோசமான போக்குவரத்து அமைப்புகளில் நான்காவது இடம் வகிக்கிறது இந்தியத் தலைநகர் டெல்லி' என்கிறது தாமஸ் ரூட்டர்ஸ் என்கிற அமைப்பு. இதில் இருக்கும் மிகப்பெரும் கேவலம், இரவில் பயணம் செய்ய ஆபத்தான நகரங்கள் பட்டியலில் டெல்லி இரண்டாவது இடத்தில் இருப்பதுதான். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்களில் கிட்டத்தட்ட 93 விழுக்காட்டினர்  பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர். அதாவது, போக்குவரத்தின்போது  51 விழுக்காடு பெண்களும், பொதுப் போக்குவரத்துக்காகக் காத்திருக்கும் நேரங்களில் 42 விழுக்காட்டினரும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர். இந்த கூட்டறிக்கையானது 2010 இல் டெல்லியில் ஜகோரி என்ற பெண்கள் வளர்ச்சி மையம் மற்றும் ஐ.நா-வின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி கழகம் சேர்ந்து எடுத்த கூட்டறிக்கை.   

பாலியல் தொந்தரவு

இதுபோன்று பொதுவெளியில் ஏற்படும் பெரும்பாலான பாலியல் தொந்தரவுகள் குறித்துப் பெண்கள் அதிகம் புகார் செய்வதில்லை. பல உதவி எண்கள் இருக்கிறபோதும் அதைப்பற்றிய சரியான விழிப்பு உணர்வு பெண்களிடையே இல்லை. 'பாலியல் துன்புறுத்தல்களுக்காகவே உலகளாவிய உதவி எண் ஒன்றை அமைப்பது அவசியம்' என்கிறது போக்குவரத்து மற்றும் வளர்ச்சி கொள்கை நிறுவனத்தின் ஆய்வு முடிவு.

பொதுவெளியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களினால், பெண்கள் பெரும்பாலும் வெளியே நடமாட முடிவதில்லை. பொருளாதார காரணங்களுக்காக வேலைக்கு வரும் பெண்கள், பயணப்படும் நேரம், பொதுப் போக்குவரத்துக்காகக் காத்திருக்கும் நேரம், வேலை செய்யும் இடங்கள் எனப் பெண்களை விடாமல் தொடர்ந்து வருகிறது பாலியல் தொந்தரவுகள். பெண்களின் பாதுகாப்பில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுக்கும் என்ற வகையில் 'நிர்பயா நிதி' என்ற பெயரில் ஒதுக்கப்பட்ட 3,100 கோடி ரூபாயில் முப்பது விழுக்காட்டுக்கும் குறைவான தொகையே உபயோகப்பட்டிருக்கிறது. பெண்களின் பாதுகாப்பில், அரசு மேலும் கவனம் செலுத்தத் தவறினால், வரும் ஆண்டுகளில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை சரளமாக குறைந்துவிடும்.  ஒரு பெண் படித்து வேலைக்குச் சென்றால், ஒரு தலைமுறைக்கு அது பயனளிக்கும் என்பதை ஆட்சியாளர்களும், அத்துமீறுபவர்களும் மறந்துவிடக்கூடாது. 


டிரெண்டிங் @ விகடன்