நீதிபதி லோயா மரணம்: மருத்துவர்கள் எழுப்பும் 8 கேள்விகள்

லோயா

நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், இவ்வழக்கில்  பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

குஜராத் மாநில உள்துறை அமைச்சராக அமித்ஷா இருந்த காலத்தில், சொராபுதீன் சேக் போலி என்கவுன்டர் வழக்கில் சிக்கினார். இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிபதி பி.ஹெச்.லோயா, நண்பர் ஒருவரின் இல்லத் திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நீதிபதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, காங்கிரஸ், சி.பி.எம், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கின. `நீதிபதி மரணத்தில் நீதி விசாரணை தேவை' என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்தும் முறையிட்டார் ராகுல் காந்தி. இந்நிலையில், நீதிபதி லோயா மரணத்தின் சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதி லோயா மரணத்தில் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை தேவையில்லை எனக் கூறி அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இந்தநிலையில், நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம். நீதிபதி லோயா மரணம் தொடர்பாக அவர் 8 கேள்விகளை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், ``அமித்ஷா வழக்கை விசாரித்த நீதியரசர் லோயா இறப்பில் விடையளிக்கப்பட வேண்டிய கேள்விகள் சில உள்ளன. முக்கிய பிரமுகர்களின் விருந்தினர் மாளிகையில் நீதியரசர் தங்கி இருந்தபோது 2014-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், லோயாவை காரில் ஏற்றிச் சென்றனரா இல்லை ஆட்டோவில் சென்றனரா என்ற கேள்வி உள்ளது. ஏன் விடுதி பணியாளர்கள் வண்டிக்கு ஏற்பாடு செய்யவில்லை?. முதலில் அவரைக் கொண்டு செல்லப்பட்டதாக எழுதப்பட்ட டாண்டே மருத்துவமனையில் இருதய நிலையை அறிய இ.சி.ஜி எடுக்கப்பட்டதா?. தேதியில் ஏன் மாற்றம் நிகழ்ந்தது. டிசம்பர் 1-க்குப் பதில் நவம்பர் 30 என மாற்றிப் பதிவாக வேண்டும்; இ.சி.ஜி-யில் தேதி முக்கியமானது என அனைவரும் அறிவர்.
புகழேந்திபத்திரிகைச் செய்திகளின்படி காலை 6 மணி என்றும் 6.15 என்றும் செய்தி வெளிவந்த நிலையில் நீதியரசருடன் இருந்த உள்ளுர் நீதிபதி விஐயகுமார் பார்டே, நீதியரசர் சகோதரர் சாப்தா மந்தானேக்கு காலை 5 மணிக்குப் போன் செய்து அவர் இறந்துவிட்டதாக ஏன் சொல்ல வேண்டும்?

அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்த பிறகே குடும்பத்தினருக்குத் தகவல் சொல்ல வேண்டும். ஏன் முன்னரே தகவல் தரப்படவில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் `cardiac arrest'-ல் ; இறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படாமல்  ஏன் மருத்துவர் பிரசாந்த் ரதி என்ற உறவினர் அல்லாத ஒருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். சட்டப்படி அவர் கையெழுத்திட்டு வாங்க முடியாது என இருக்கையில், குறிப்பாக குடும்பத்தினரிடமும் பேசி ஒப்புதல் பெறாமல் உடலை அவரிடம் எப்படி ஒப்படைக்க முடியும். அது சட்டப்படி குற்றம் இல்லையா, யார் அதற்குக் காரணம்?

சகோதரி பியானி, அப்பா ஹர்கிசன் ஆகியோர் லோயாவின் சட்டையில் ரத்தக் கறை இருந்தது எனத் தெளிவாகச் சொல்லிய நிலையில், ஒரு பத்திரிகையில் பிரேதப் பரிசோதனை ஆய்வுக்கு அந்த ரத்தம் பின் தையல் போட்ட இடங்களிலிருந்து வந்திருக்கலாம் எனத் தடயவியல் துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்ததாக உள்ளது. வினோத் ஜோஸ் எனும் பத்திரிக்கை ஆசிரியர்; அவரது உடல் தனிப் போர்வையால் சுற்றப்பட்டிருந்தது என்றும்  உடைகள் தனியாக ஒரு பையில் இருந்தது என்றும் சொல்லும்போது அந்த ரத்தம் ஏன் அவர் உயிருடன் இருக்கும்போதே வந்திருக்கலாம் எனும் வாய்ப்புக்கு விடைதான் என்ன?. அவரது செல்போன், குடும்பத்தினருக்கு 2 - 3 நாள்களுக்குப் பிறகுதான் கொடுக்கப்பட்டது. அது ஏன். அதில் சில முக்கிய விவரங்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது எனக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சாட்சிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?. 
அவரின் மகன் மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அவரது இறப்பு விசாரணை செய்யப்பட வேண்டும் என ஏன் கடிதம் எழுத வேண்டும். இதுவும் அந்தப் பத்திரிகையில் செய்தியாக உள்ளது.

மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோதே, அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை கூறிய நிலையில், ரூ.4,290 அவரிடம் ஏன் தொகையாக வசூலிக்க வேண்டும். இதில் வேடிக்கை என்னவெனில் உணவு அறிவுரை வழங்கியவருக்கான ஆலோசனைக் கட்டணமும் அடங்கும். (நீதிமன்றம் தீர்ப்பில் அது தவறு என்று குறிப்பிட்டுள்ளது). மருத்துவமனைப் பதிவில் அவருடைய பெயரும் தவறாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஏன்?.

உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ நீதிமன்றத்தில் வழக்கை நடத்தும்போது நீதிபதியை எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றக் கூடாது எனத் தெளிவாகக் கூறியதால், முதலில் நீதிபதி லோயாவிடம் சாதகமான தீர்ப்பை வழங்க ரூ.100 கோடி பேரமாகப் பேசப்பட்டதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆக அமித்ஷா முக்கிய குற்றவாளியாக உள்ள வழக்கில் லோயாவின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. மேலும், அவர் இறந்த பின் நியமிக்கப்பட்ட புது நீதிபதி சில மாதங்களுக்குள்ளாகவே அமித்ஷாவை குற்றத்திலிருந்து விடுவித்துள்ளார்; இதை எதிர்த்து ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? (அரசியல் தலையீடா?). உண்மை வெளிச்சத்துக்கு வர மேல் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கான முறையான பதில் அவசியம் தேவைப்படுகிறது’’ என்றார்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!