காஷ்மீர் சிறுமி விவகாரம் - குற்றவாளிகளுக்கு எதிராக வலுக்கும் ஆதாரங்கள்!

காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் கிடைத்துள்ள தடயங்கள் குற்றவாளிகளுக்கு எதிராக உள்ளதாக அறிக்கை வந்துள்ளது.

கத்துவா

காஷ்மீரில் கத்துவா என்ற பகுதியைச் சேர்ந்த 8 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது பொதுமக்கள் மற்றும் பெண்கள் அமைப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சிறுமிக்கு நீதி வழங்க வேண்டும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் முதலில் வழக்கறிஞர்கள் ஜம்மு-காஷ்மீரில் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக காஷ்மீர் பார் கவுன்சிலுக்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பிறகு, குற்றவாளிகள் 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இந்தவிவகாரம் தொடர்பாக முதலில் காவல் துறையினரே சிறுமியின் ஆடையைத் துவைத்து தடயங்களை அழித்துள்ளனர். இதனால் இந்தப் பிரச்னை பெரும் பேசுபொருளாக மாறியது. இதன் பின் எழுந்த பெரும் சர்ச்சையைத் தொடர்ந்து வழக்கு மீதான விசாரணை முழுமையாக நடைபெறத் தொடங்கியது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து, மண்ணில் இருந்த ரத்த மாதிரிகள், சிறுமியின் உடை உள்ளிட்ட 14 தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதன் முதல்கட்ட சோதனையில் மண்ணிலிருந்த ரத்தத்துடன் குற்றவாளியின் ரத்தம் ஒத்துப் போனது. இந்த அறிக்கை கடந்த ஏப்ரல் 3- ம் தேதி காஷ்மீர் சிறப்புப் புலனாய்வுத் துறைக்கு அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் சம்பவ இடத்திலிருந்து இரண்டு முடிகளை தடயவியல் துறையினர் கைப்பற்றினர். இதன் சோதனை முடிவில் ஒரு முடி சிறுமியுடையது என்றும் மற்றொன்று குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒருவருடையது என்றும் தெரியவந்துள்ளது. இதனால் காஷ்மீர் சிறுமி விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் வலுத்து வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!