`மனிதர்களைச் சோதனை எலியாக்கிய வெளிநாட்டு மருந்துக் கம்பெனி!’ - ராஜஸ்தானில் கொடூரம் | a foreign based pharma company tested medicines on humans

வெளியிடப்பட்ட நேரம்: 22:01 (21/04/2018)

கடைசி தொடர்பு:22:01 (21/04/2018)

`மனிதர்களைச் சோதனை எலியாக்கிய வெளிநாட்டு மருந்துக் கம்பெனி!’ - ராஜஸ்தானில் கொடூரம்

வெளிநாட்டு மருந்து நிறுவனம் ஒன்று கண்டுபிடித்த புதிய மருந்தை, அப்பாவி தொழிலாளிகளிடம் பரிசோதனை செய்து பார்த்த விவகாரம் ராஜஸ்தானில் புயலைக் கிளப்பியுள்ளது. 

போலி மருந்து

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிடாசர் என்ற பகுதியில் செயல்பட்டு வருகிறது வெளிநாட்டைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனம். இந்நிறுவனம் சமீபத்தில் புதுவகை மருந்து ஒன்றைக் கண்டுபிடித்து இருக்கிறது. மருந்தியல் ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கும் புதுவகை மருந்துகளை, சந்தையில் அறிமுகப்படுத்துவதற்குமுன் எலி, குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்குச் செலுத்தி பரிசோதனை செய்வது வழக்கம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இந்த நிறுவனம், தங்களிடம் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறது. 

பரிசோதனை

இதனால், பரிசோதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சுரு (churu) மாவட்டத்தில் உள்ள ஜால்பானி மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பரிசோதனை

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் ஒருவர் கூறுகையில், 'எங்கள் நிறுவனத்தில் வேலை உள்ளது. நாள் ஒன்று 500 ரூபாய் சம்பளமாக தருகிறோம் என்று கூறி மருந்து கம்பெனியினர் அழைத்து வந்தனர். முன்பணமும் அவர்கள் வழங்கினர். அதனால், என்னைப்போல் 20-க்கும் அதிகமானோர் கடந்த 18-ம் தேதியில் இங்கு பணியில் சேர்ந்தோம். பணியில் சேர்ந்த நாளிலிருந்து எங்களுக்கு ஏதோ ஒருவகை மருந்தைச் செலுத்தி வந்தார்கள். எதுவும் புரியாமல் இருந்தோம். அதில், 16 பேருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருந்து செலுத்தப்பட்டவுடன், உடலில் சோர்வு ஏற்படுவதை நாங்கள் உணர்ந்தோம். இதையடுத்து பாதிக்கப்பட்ட என்னைப் போன்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம்' என்றார். 

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய ராஜஸ்தான் மாநிலச் சுகாதாரத்துறை அமைச்சர் காளி சரண் சாராஃப், 'வெளிநாட்டு மருந்துக் கம்பெனி, தொழிலாளர்களிடம் மருந்துகளைச் செலுத்தி சோதனை செய்தது தொடர்பாக விசாரித்து வருகிறோம். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தச் செயலியில் ஈடுபட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.