பாலியல் வன்முறை பற்றி வெளுத்து வாங்கிய த்ரிஷா ஷெட்டி... யார் இவர்?!

த்ரிஷாவும் அவரது சகோதரி நேஹாவும் இணைந்து, பாலியல் சமத்துவத்துக்குத் தேவையான அனைத்து விவரங்களையும், விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளையும், ஷீசேஸ்.இன் இணையதளம் மூலம் நடத்திவருகின்றனர்.

பாலியல் வன்முறை பற்றி வெளுத்து வாங்கிய த்ரிஷா ஷெட்டி... யார் இவர்?!

த்ரிஷா ஷெட்டி

PC: facebook.com/trisha.shetty

``இங்கே யாருக்குமே தார்மிகப் பொறுப்பு உணர்ச்சி இல்லை. சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அபு ஆஸ்மி, `பெண்கள் எல்லோரும் தங்கம் போன்றவர்கள்' என்கிறார் கிண்டலான குரலில். முலாயம் சிங் யாதவ், `நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பாலியல் குற்றம் புரிபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை நீக்குவோம். ஏனென்றால், ஆண்கள் தவறு செய்வது இயல்பு' என்கிறார். சிவசேனா பற்றிச் சொல்லவே வேண்டாம். ஏற்கெனவே அதைப் பற்றி உங்களிடம் விவாதித்துள்ளேன். பி.ஜே.பி கட்சி பற்றி பேசினால், `நான் இந்த நாட்டுப் பெண்களுக்காகவும் குழந்தைகளின் நலத்துக்காகவுமே நிற்கிறேன்' என்ற ஒற்றை வார்த்தை வரவே மோடிக்கு நான்கு நாள்கள் ஆகிறது. 

முதலில், ஒரு பிரச்னையைக் கையில் எடுக்க வேண்டும். உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட சென்கரைக் கட்சியிலிருந்து தூக்குங்கள். குறைந்தபட்சம், இந்த வழக்கு விசாரணை முடிந்து, குற்றமற்றவர் என நிரூபணம் ஆகும் வரையாவது கட்சியிலிருந்து நீக்குங்கள். பதவியிலிருந்து தூக்குங்கள். `நான் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்காகவும் இருக்கிறேன். ஒவ்வொரு குடிமகனும் இந்நாட்டின் வி.வி.ஐ.பி' என்கிற மோடிஜி, இந்த விஷயத்தில் சென்கரைக் கண்டித்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணையும் குடும்பத்தையும் தரக்குறைவாகப் பேசியவர் சென்கர். எவ்வளவு அகம்பாவம் இருந்திந்தால் அப்படிப் பேசியிருப்பார்? யாருக்குமே இங்கே வெட்கம் இல்லை. இந்த நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை. ஒரு பெண் வெளியில் காலடி எடுத்துவைத்தாலே பாதிக்கப்படுகிறாள்.

எந்த அரசியல்வாதிகளுக்கும் இங்கே வெட்கம் என்பதே இல்லை. ஆட்சியில் இருக்கும் கட்சியினர், எதிர் கட்சியிரைக் குற்றம் சாட்டுவார்கள். அடேய்! ஒரு நிமிடம்... உங்கள் கட்சியில் என்னென்ன தவறுகள் நடக்கின்றன, யார் யார் தவறு செய்கின்றனர் என்பதைக் கவனித்துப் பாருங்கள். உங்கள் கட்சியில் தவறு செய்பவர்களைப் பதவியிலிருந்து விலக்குங்கள்; கட்சியிலிருந்து விலக்குங்கள். `ஆம்! என் கட்சி தவறு செய்திருக்கிறது என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுங்கள். பெண்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்கிறார்கள். பெண்கள் அரசியலில் இருக்க வேண்டும். இதுபோன்ற தவறுகளைத் தட்டிக் கேட்க வேண்டும்” 

- இது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், த்ரிஷா ஷெட்டி உணர்ச்சிகரமாகவும் அர்த்தமுள்ள அழுத்தமான வார்த்தைகளிலும் எல்லா அரசியல் கட்சிகளையும் வெளுத்து வாங்கும் உரை. அங்கிருப்பவர்கள் உறைந்துப்போய் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

த்ரிஷா ஷெட்டி
PC: forbes.com

இரண்டு நாள்களுக்கு முன்பு, ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சி, நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் கத்துவா பாலியல் வன்முறை வழக்கு, உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கு, பிரதமர் நரேந்திர மோடி லண்டனில் நிகழ்த்திய உரை குறித்து ஒரு விவாத நிகழ்ச்சி நடத்தியது. # Netasdon'tpreach (தலைவர்கள் அறிவுறுத்த வேண்டாம்) என்ற ஹெஷ்டேக்கில் நடந்த இந்நிகழ்ச்சியில்தான், இப்படி அழுத்தம் திருத்தமாகப் பேசியிருக்கிறார் த்ரிஷா ஷெட்டி. அது வைரலாகி வருகிறது. யார் இந்த த்ரிஷா ஷெட்டி?

மும்பைச் சேர்ந்த த்ரிஷா ஷெட்டி, சிறுவயது முதலே சட்டத்துறையில் சாதிக்கும் எண்ணத்துடன் இருந்தவர். அரசியல் அறிவியல் ( Political science) முடித்து, உளவியல் படித்தார். பின்னர், சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். பெண்களின் பாதுகாப்பு, பெண் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் சட்டரீதியாக எப்படி அணுக வேண்டும், மருத்துவ ரீதியாக எப்படி அணுக வேண்டும் எனப் பல விஷயங்களை அடிப்படையாக வைத்து, `ஷீசேஸ்’ (Shesays) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தார். இதற்கு இரண்டு விஷயங்கள் அடித்தளமாக அமைந்திருக்கிறது. ஒன்று, 2012-ம் ஆண்டு, டெல்லியில் ஓடும் பேருந்தில் நடந்த பாலியல் கூட்டு வன்முறை. மற்றொரு காரணத்தையும் கூறுகிறார். 

``நான் பலமுறை பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நம் நாட்டில், வெகுசில பெண்களே தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறேன் என்று வெளிப்படையாகக் கூற முடிகிறது. இதுபோன்ற குற்றங்களுக்கு நாம் வளர்த்துக்கொள்ளும் சகிப்புதன்மையை உடனே நிறுத்த வேண்டும். இதற்கான வழிகளைத் தேடியபோது, எனக்குச் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. அதனால்தான், அத்தகைய களத்தை நானே உருவாக்கினேன்” என்கிறார்.

த்ரிஷாவும் அவரது சகோதரி நேஹாவும் இணைந்து, பாலியல் சமத்துவத்துக்குத் தேவையான அனைத்து விவரங்களையும், பெண்களின் நலன் குறித்த விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளையும், ஷீசேஸ்.இன் இணையதளம் மூலம் நடத்திவருகின்றனர். பாலியல் வன்முறை, டாக்ஸ் ஃப்ரீ நாப்கின், பெண் குழந்தைகள் பாதுகாப்பு எனப் பல்வேறு முறையில் உதவும் சமூகப் பணிகளை இணையதளத்திலும் நேரடிக் களத்திலும், இருவரும் செய்துவருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைத்தும் இதற்காகப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!