சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு! - அவசரச் சட்டத்துக்கு  குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ராம்நாத் கோவிந்த்

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிப்பதற்கான அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  ஒப்புதல் அளித்துள்ளார். 

காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு, தொடர்ந்து வட மாநிலங்களில் பல பகுதிகளில் இது போன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தக் குற்றத்தில் ஈடுபடுவோர் மீதான சட்டம் மற்றும் தண்டனைகளை மக்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், இது போன்று பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் ஆண்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. 

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதுக்கு எதிராகப் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், `12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் ‘போஸ்கோ’ சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த சூழலில், 5 நாள் பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, நேற்று காலை நாடு திரும்பினார். இந்தியா வந்தவுடன் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவையின் அவரசரக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கும் வகையில் ‘போஸ்கோ’ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும், பாலியல் வன்கொடுமை சம்பந்தமான வழக்குகளை விரைவில் விசாரணை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியவுடன், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட காஷ்மீர் சிறுமிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தியால் சட்டத்திருத்தம் செய்வது குறித்த மசோதா முன்மொழியப்பட்டது. அப்போது பேசிய மேனகா காந்தி, `சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்’ எனக் கூறினார்.

இதே போன்று பொருளாதார குற்றவாளிகள் தொடர்பான அவசர சட்டத்திற்கும் நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இவ்விரு அவரச சட்டங்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்விரு அவரச சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று  ஒப்புதல் அளித்துள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!