'பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது!' - வெங்கைய நாயுடு கொடுத்த விளக்கம்

டிஜிட்டல் இந்தியாவை முன்னிறுத்தி, நாட்டில் கறுப்பு பணப்புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார் பிரதமர் மோடி. ஆண்டுகள் கடந்தபின் அதற்கான விளக்கத்தைத் தெரிவித்திருக்கிறார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. 

வெங்கையா நாயுடு

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, பிரதமர் மோடி தொலைக்காட்சி வாயிலாக மக்களுக்கு 'ஹாட் பிரேக்கிங்' செய்தி ஒன்றை இரவு 8 மணிக்கு வெளியிட்டார். 'இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது'. கறுப்புப் பணத்தை ஒழித்து, டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கவே இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எனக் காரணம் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து, பொது மக்கள் வங்கியில் பணத்தை மாற்றவும் அன்றாட செலவுக்கு பணம் எடுக்கவும் வங்கிகளிலும் ஏ.டி.எம்-களிலும் நீண்ட வரிசையில் காத்து கிடந்தனர். இந்நாள் வரை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை  தவறு என்று காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பணமதிப்பிழப்பு குறித்துப் பேசியிருக்கிறார். அதில் 'மோடி அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மக்கள் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர். மேலும், பணமதிப்பிழப்பினால் என்ன பயன் என்று கேட்கிறார்கள். இந்தக் கேள்விக்கான பதில், பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது. இந்த நோக்கத்திற்காகத்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று நினைக்கிறேன்' என்று கூறி விளக்கம் தந்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!