வெளியிடப்பட்ட நேரம்: 12:07 (22/04/2018)

கடைசி தொடர்பு:12:07 (22/04/2018)

காஸ்ட்லி பேனா, நவராத்திரி உணவு, விமான பயணங்கள்.. பிரதமர் மோடி குறித்த ஆர்.டி.ஐ தகவல்கள்!

மோடி

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியையும், குஜராத் மாநிலத்தில் அவரது செயல்பாடுகளையும், அவரது எளிமையையும் முன்னிலைப்படுத்தியே பிரசாரம் செய்து வெற்றி கண்டது பாரதிய ஜனதா கட்சி. முதலமைச்சராக இருந்து பிரதமராக மோடி மாறிய போது பலரும், 'இவரால் இந்தியா வளர்ச்சியடையும்' என நம்பிக்கைத் தெரிவித்திருந்தனர். ஆனால் இந்தியா வளர்ந்ததா என்றால், அது தான் தெரியவில்லை. ஆனால், உலகில்  ஸ்டைலான அதிபர்கள், பிரதமர்கள் பட்டியலில் நிச்சயமாக மோடிக்கு சிறப்பான இடம் உண்டு. தான் அணியும் ஆடையில் இருந்து பயன்படுத்தும் பொருள்கள் வரை அனைத்தும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என விரும்புபவர் பிரதமர் மோடி.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, இந்தியா வந்தபோது மோடி, ஒரே நாளில் பல வகையான உடைகள், ஒவ்வொன்றும் ஒவ்வோரு ரகத்தில் உடுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது, அவரைப் பற்றிய இன்னோரு செய்தி. 2013ல் 'இந்தியா டுடே'யில் வெளியான அறிக்கையின் படி பிரதமர் மோடி பயன்படுத்தும் பேனாவின் மதிப்பு 1.3 லட்சம் ரூபாய். 

பிரதமர் மோடிக்கு பேனாக்களின் மீது தனி மோகம் உண்டு. அவர் பேனாக்களின் தீவிர ரசிகர். வித விதமான பேனாக்களைச் சேகரிப்பது அவருக்குப்பிடித்தமான விஷயம். இதுவரை பல்வேறு உயர்ரக பிராண்டைச் சேர்ந்த பல பேனாக்களை அவர் வைத்துள்ளார். எனினும் ஜெர்மனியைச் சேர்ந்த ‘மாண்ட் பிளான்க்’ நிறுவன பேனா தான் மோடியின் ஃபேவரைட். அவர் உபயோகித்துவரும் பேனாவை அமேஸான் தளத்தில் தேடினால் 1,30,000 ரூபாய் என காட்டுகிறது. அவர் பயன்படுத்தும் பேனாக்களில் பெரும்பாலானவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே. இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது. தான் ஆட்சிக்கு வந்த புதிதில், ‘இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இந்திய பொருள்களை மட்டும் வாங்குங்கள், இந்தியாவின் பொருளாதாரத்தை நான் முன்னேற்றிக் காட்டுகிறேன்’ என்ற முழக்கத்தையும் அவர் முன்வைத்தார். மக்களை இந்திய பொருட்களை உபயோகிக்கச் சொல்லிவிட்டு நீங்கள் மட்டும் இம்போர்ட் பண்ணி யூஸ் பண்ணுவது எந்த வகையில் நியாயம் மோடி ஜி?

மோடி

வருடா வருடம் நவராத்திரிக்கு மோடி விரதமிருப்பார், அந்த நாள்களில் தண்ணீர் மட்டுமே அருந்துவார். அவ்வப்போது பழச்சாறுகளும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி, “ஆட்சிக்கு வந்ததில் இருந்து நவராத்திரி நாள்களில் மோடி எடுத்துக் கொள்ளும் தண்ணீருக்கும் பழச்சாறுகளுக்கும் எவ்வளவு செலவழிக்கப்படுகிறது?”.  இதற்கு பிரதம மந்திரி அலுவலகத்தில் இருந்து அளிக்கப்பட்ட பதில் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது. அதாவது அந்த தண்ணீருக்கும் பழச்சாறுக்கும் மட்டும் பத்து கோடியே ஒன்பது லட்சத்து எட்டு ஆயிரத்து  நாற்பத்தைந்து ரூபாய் (10,09,08,045 rs) செலவழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

சமீபத்தில், ஓய்வு பெற்ற கப்பல் படை அதிகாரி லோகேஷ் பத்ரா, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் பிரதமர் மோடி கடந்த 2013 முதல் 2017-ம் ஆண்டு வரை ஏர் இந்தியா விமானம் மூலம் வெளிநாடு பயணம் சென்றதில், ஏற்பட்ட செலவுகள், நிறுவனத்துக்கு அரசு வழங்கிய தொகை, செலுத்த வேண்டிய நிலுவை தொகை, ஒட்டுமொத்த செலவு விவரங்களைக் கேட்டார். இதற்கு வழங்கப்பட்ட தகவல்கள் திருப்தியளிக்காததால், மத்திய தலைமைத் தகவல் ஆணையர் மாத்தூரிடம் மேல்முறையீட்டு மனுவை பத்ரா தாக்கல் செய்தார். இந்த விசாரணையின்போது தகவல்களை அளிக்க ஆட்சேபனை தெரிவித்திருந்தது இந்திய வெளியுறவுத்துறை. ஆனால், ''பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்கான செலவு விவரங்கள் அனைத்தையும் தேதி வாரியாக வெளியிட வேண்டும்." என உத்தரவிட்டிருக்கிறார் மாத்தூர். 


டிரெண்டிங் @ விகடன்