போக்சோ சட்டம்.. மத்திய அரசு பரிந்துரை.. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு இதுதான் தீர்வா?

கத்துவா சிறுமி பாலியல் வன்முறை வழக்கு மற்றும் உன்னாவ் வழக்கு ஏற்படுத்திய தாக்கத்தைத் தொடர்ந்து, பாலியல் வன்முறை குறித்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும் கண்டனங்களும் எழுந்துள்ளன.

போக்சோ சட்டம்.. மத்திய அரசு பரிந்துரை.. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு இதுதான் தீர்வா?

பாக்சோ

'குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ், இனி 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்' 

பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில், மத்திய அரசு கடந்த சனிக்கிழமை பரிந்துரைத்துள்ள  சட்டத் திருத்தம் இது. 2012-ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தின்கீழ் (Prevention of children from sexual offences act 2012) இந்த மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசு பரிந்துரைந்துள்ளது.

பாக்சோஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா சிறுமி பாலியல் வன்முறை வழக்கு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கு ஏற்படுத்திய தாக்கத்தைத் தொடர்ந்து, பாலியல் வன்முறை குறித்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும் கண்டனங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் இந்தப் பரிந்துரை எந்தளவுக்கு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்? போக்சோ சட்டம் உண்மையிலேயே பலன் அளிக்குமா? இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெஸ்லியிடம் பேசினோம்.

``போக்சோ சட்டத்தை உருவாக்கியதன் நோக்கம், குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறை வழக்குகளை விரைந்து விசாரித்து, தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதே. இந்தச் சட்டத்தின்கீழ், வழக்கு விசாரணை தொடங்கி, ஒரு வருடத்துக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என்பதே இதன் சிறப்பம்சம். இதன்மூலம், பாலியல் வன்முறை மட்டுமின்றி, பாலியல் தொல்லை, குழந்தைகளை ஆபாசமாக ஒளிப்பதிவு எடுப்பது போன்ற குற்றங்களுக்கும் தண்டனை வழங்கலாம்.

பொதுவாக, எந்த ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டாலும், நீதிமன்றத்தில் அந்த வழக்கு தொடர்பான விசாரணையைத் தொடங்க, குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகும். இதில் சிக்கல் என்னவென்றால், ஒரு வழக்கு பதிவுசெய்யப்படும்போது, அதுகுறித்து ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்துப் பேசும். இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து அந்த வழக்கின் விசாரணை தொடங்கும்போதோ, ஊடகங்களும் பொதுமக்களும் மறந்தே போயிருப்பார்கள். எப்போது ஒரு வழக்கு பொது கவனத்துக்குக் கொண்டுவரப்படுகிறதோ அப்போதுதான், அதன் விசாரணையும் விரைந்து நடத்தப்படும். பாலியல் வன்முறை வழக்குகளுக்கும் இது மிகவும் பொருந்தும். சமீபத்தில், உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் நடந்த பாலியல் வன்முறையும் மீடியா வெளிச்சத்துக்கு வந்தது. அதனால்தான், செல்வாக்கு பெற்ற அரசியல்வாதியான குல்தீப் சிங்  சென்கரை எதிர்த்து அந்தப் பெண்ணும் அவர் குடும்பமும் எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் போராடமுடிகிறது. இல்லையெனில், இந்த வழக்குக்கு எப்போதோ முழுக்கு போட்டிருப்பார்கள்.  

பாக்சோ

எந்தச் சட்டத்திருத்தம் வந்தாலும், அடிப்படையில் சில விஷயங்களைச் சரிசெய்யாமல், இதுபோன்ற வழக்குகளுக்கு நியாயமான, உடனடி தீர்வைக் காணமுடியாது. பாலியல் வன்முறை என்பது, ஒரு சமுதாய பிரச்னை, எனவே, குற்றம் புரிந்த சிலருக்கு மரண தண்டனை வழங்குவதால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. சிலர் மற்ற நாட்டின் சட்டதிட்டங்களுடன் இதை ஒப்பிடுவார்கள். சவுதி அரேபியாவில் அப்படிச்  செய்கிறார்கள் எனில், அவர்களின் பழக்கவழக்கங்கள் வேறு. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்திய கலாசாரமும் பழக்கவழக்கங்களும் வேறு. அதற்காக, குற்றவாளிகளைத்  தண்டிக்காமல் இருக்க வேண்டும் என்று கூறவில்லை. இன்னும் ஆழ்ந்து ஆலோசித்து, இந்தப் பிரச்னையை வேருடன் பிடுங்கி எறிவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள பரித்துரை வெறும் கண்துடைப்பாகவே தெரிகிறது; இதைவிடுத்து, உண்மையாகத் தீர்வு காணும் செயலில் இறங்க வேண்டும்" என்கிறார் வெஸ்லி.

நாட்டை உலுக்கும் இந்தச் சமூக சிக்கலைப் பற்றி, பிரதமர் நரேந்திர மோடி பேசுவதற்கே நான்கு நாள்கள் ஆகின. இந்தத் தாமதத்தை, இனியும் இந்த விவகாரத்தில் காட்டினால், இந்திய பெண்கள் அனைவரும் போராட்டக் களத்தில் குதிக்க வேண்டியதுதான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!