`கல்வி, சுகாதாரத்தில் பின்தங்கியுள்ளோம்!' - நிதி ஆயோக் சி.இ.ஓ ஆதங்கம்

`கல்வி மற்றும் சுகாதாரத்தில் இந்தியா உலகளவில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. குழந்தைகள் இறப்பு விகிதமும் கணிசமாக உயர்ந்துள்ளது' என ஆதங்கப்பட்டிருக்கிறார் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த். 

அமிதாப் காந்த்

டெல்லி, ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கான் அப்துல் கபார் கான் நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய அமிதாப் காந்த், ` இந்தியாவின் கிழக்கு பகுதிகள் சமூக வளர்ச்சியில் பின்தங்கி இருக்கின்றன. நாட்டில் சிறு தொழில்களைத் தொடங்கி, வணிக வியாபாரம் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பீகார் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன.

தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்கள், தொழில், வணிகம், சமூகம் ஆகியவற்றில் வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறிச் செல்கிறது' என்றவர், தொடர்ந்து பேசும்போது, 'இரண்டாம் வகுப்பு கணக்குப் பாடப் புத்தகத்தில் உள்ள கூட்டல் கழித்தல்கள் கணக்குகளைக்கூட ஐந்தாம் வகுப்பு படித்துவரும் மாணவர்களால் தீர்க்க முடியவில்லை. ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தமது தாய்மொழியைக்கூடச் சரளமாகப் படிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். கல்வி மற்றும் சுகாதாரத்தில் இந்தியா உலகளவில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. குழந்தைகள் இறப்பு விகிதமும் கணிசமாக உயர்ந்துள்ளது. மனித வளர்ச்சிக் குறியீட்டில் 188 நாடுகளில் இந்தியா 131 வது இடத்தைப் பிடித்துள்ளது. மனித வளர்ச்சி குறியீட்டில் நாம் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம்' என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!