`ஒரு மனிதனாக அந்தப் பதிலைச் சொன்னேன்!' - சர்ச்சைப் பேச்சுக்கு சல்மான் குர்ஷித் விளக்கம் | I made the statement as a human being said salman khurshid

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (24/04/2018)

கடைசி தொடர்பு:20:00 (24/04/2018)

`ஒரு மனிதனாக அந்தப் பதிலைச் சொன்னேன்!' - சர்ச்சைப் பேச்சுக்கு சல்மான் குர்ஷித் விளக்கம்

`காங்கிரஸ் கைகளில் இஸ்லாமியர்களின் ரத்தக்கறை உள்ளது' எனப் பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித். 

சல்மான் குர்ஷித்

டெல்லி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித். நிகழ்ச்சியில் அவரிடம் கேள்வி கேட்ட மாணவர் ஒருவர், `1948-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது முதல் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஹசன்பூரா, மாலியானா, முசாபர்நகர் உள்ளிட்ட நீண்ட பட்டியல் கொண்ட கலவரங்களும் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றன. பாபர் மசூதியின் உள்ளே சிலைகளை வைத்ததும் பின்னர், பாபர் மசூதியை இடித்துத் தள்ளியதும் உங்கள் ஆட்சியில்தான். காங்கிரஸ் கையில் இஸ்லாமியர்களின் ரத்தக்கறை உள்ளது. இதைப் பற்றிய உங்களின் கருத்து என்ன' என்று கேள்வி கேட்டார். 

இதற்குப் பதில் அளித்த சல்மான் குர்ஷித், `முஸ்லிம்களின் ரத்தக்கறை எங்கள் கைகளில் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.எங்கள் கைகளில் படிந்துள்ள ரத்தத்தைக் காட்டத் தயாராக இருக்கிறோம். மற்றொருவரைத் தாக்கினால், ரத்தக்கறை படிந்த கரங்களாக உங்கள் கரங்களும் மாறிவிடும். இனிமேல் இதுபோன்ற ரத்தக்கறை உங்கள் கைகளில் படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய கறைகள் உங்கள் கைகளிலும் வரக் கூடாது. இதை, நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்' எனப் பதில் அளித்தார். 

மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர், `நான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன். ஆதலால், காங்கிரஸ் கட்சி மீது சுமத்தும் குற்றச்சாட்டில் எனக்கும் பங்கிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டைக் காப்பாற்ற அவ்வாறு கூறினேன். சொல்லப்போனால், ஒரு மனிதனாக அந்தப் பதிலை வெளியிட்டேன்' எனத் தன்னிலை விளக்கம் கொடுத்தார்.