வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (24/04/2018)

கடைசி தொடர்பு:19:00 (24/04/2018)

`இவரைக் கண்டுபிடித்துத் தந்தால் ரூ.12,000 பரிசு!' - குற்றவாளி கண்முன் போஸ்டர் ஒட்டிய போலீஸ்

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரை அருகில் வைத்துக்கொண்டே அவர் குறித்த போஸ்டரை அவர் வீட்டிலேயே காவலர்கள் ஒட்டியுள்ளனர்.

குற்றவாளி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பீம் ஆர்மி என்ற அமைப்பின் தலைவராக உள்ளவர் 35 வயதான வினய் ரத்தன். கடந்த வருடம் மே மாதம், வன்முறை மற்றும் வாகனங்களுக்குத் தீ வைப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் இவர்மீது வழக்கு பதிவு செய்து
காவல்துறையினர் தேடிவந்தனர். மேலும், அவர் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.12,000 பரிசு வழங்கப்படும் எனக் காவல்துறையினர் அறிவித்திருந்தனர். ஒரு வருடத்துக்கு மேலாகியும் இவரைப் பற்றிய தகவல் தெரியாததால் இவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை அன்று வினய் ரத்தனைத் தேடி அவரது வீட்டுக்குக் காவல்துறையினர் சென்றுள்ளனர். அங்கு வினய் ரத்தனின் அம்மா, சகோதரரிடம் விசாரணை நடத்திவிட்டு, வினய் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட போஸ்டரை அவர் வீட்டின் முன் ஒட்டிவிட்டு காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளனர். காவலர்கள் சென்ற பிறகு அவர்களுக்கு வீடியோ ஒன்று வந்துள்ளது. அதில் ஒருவரை வட்டமிட்டு அடையாளப் படுத்திக்காட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஏனெனில், காவலர்கள் குற்றவாளியின் வீட்டுக்கு சென்றிருந்தபோது வினய் ரத்தன் அவரது வீட்டிலேயே இருந்துள்ளார். காவலர்கள் குற்றவாளியின் தாய் மற்றும் சகோதரரிடம் விசாரணை நடத்தியபோது வினய் அவர்களுக்குப் பின்னாலேயே நின்றிருந்துள்ளார். ஆனால்
காவல்துறையினர் அவரைக் கவனிக்காமல் விசாரணை மட்டும் நடத்திவிட்டுச் சென்றுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் அம்மாநில ஊடங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. தகவல் தெரிந்து உடனடியாக வினய்யின் வீட்டுக்குக் காவல்துறையினர் சென்ற போது அவர் அங்கிருந்து தப்பித்துவிட்டார். 

இதுகுறித்து பேசிய போலீஸ் எஸ்.பி வித்யா சாஹர் மிஸ்ரா, “ஊடகங்கள் வெளியிட்ட வீடியோவின் உண்மைத் தன்மை விரைவில் கண்டுபிடிக்கப்படும்” என்றார். இதைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமையன்று வினய் ரத்தன் தாமாக முன்வந்து அம்மாநில நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.