வெளியிடப்பட்ட நேரம்: 18:23 (24/04/2018)

கடைசி தொடர்பு:18:23 (24/04/2018)

மீண்டும் வலுவான நிலையில் சென்செக்ஸ், நிஃப்ட்டி  

ஒரு நல்ல பாசிட்டிவான தொடக்கத்திற்குப் பின், மதியம் சில நிமிடங்கள் தொய்வடைந்த இந்தியப் பங்குச்சந்தை, விரைவிலேயே சுதாரித்து மேல் நோக்கி நகர்ந்து நல்ல வலுவான நிலையில் முடிவுற்றது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 165.87 புள்ளிகள், அதாவது 0.48 சதவிகிதம் லாபத்துடன் 34,616.64 என முடிந்தது.
தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்ட்டி 29.65 புள்ளிகள், அதாவது 0.28 சதவிகிதம் லாபத்துடன் 10,614.35-ல் முடிவுற்றது.

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு 66.31 எனச் சிறிது ரெக்கவர் ஆனது.

நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்கச் சந்தை ஒரு தொய்வடைந்த நிலையில் முடிந்திருந்தாலும், மேலும் அமெரிக்க வட்டி விகிதம் உயரக்கூடிய சாத்தியக்கூறு இருக்கும் நிலையில் ஒரு கவலை இருப்பினும், பெரும்பாலான ஆசியச் சந்தைகள் இன்று முன்னேற்றம் கண்டன.

ரஷ்ய நாட்டின் அலுமினிய நிறுவனமான யுனைடெட் ருசால் மீதான தனது தடைகளை அமெரிக்க அரசு சற்று தளர்த்தியிருப்பதால் அலுமினியத்தின் விலை பெருமளவில் குறைந்திருப்பதையடுத்து, மெட்டல் துறை நிறுவனங்களின் பங்குகள் இன்று சரிந்தன. ஆயினும், இது சந்தையின் முன்னேற்றத்திற்கு ஓரளவு தடையாக இருந்ததேயன்றி அதன் போக்கை முற்றிலுமாகத் தடுக்கவில்லை.

இதுபோலவே, 2014 நவம்பரில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தும் லெவலில் இருந்தும் அன்று சந்தையின் போக்கைப் பெரிதளவு பாதிக்கவில்லை.

இதுவரை வெளிவந்த காலாண்டு நிதி அறிக்கைகள் ஓரளவு உற்சாகமூட்டக்கூடிய வகையில் அமைந்திருப்பதால், முதலீட்டாளர்கள் இனி வரும் அறிக்கைகளும் சாதகமாகவே இருக்கும் என நம்புவது சந்தையின் ஏறுமுகத்திற்கு வித்தாக அமைந்ததாகக் கூறலாம்.

வரும் வியாழனன்று Futures & Options எக்ஸ்பைரி இருப்பதால், சில முக்கிய கவுன்டர்களில் சிறிது ஷார்ட் கவரிங் நடைபெற்றதும்  இன்று சந்தையின் பாசிட்டிவான முடிவுக்கு ஒரு காரணம்.

ரிலையன்ஸ் ஜியோவின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாக வந்திருக்கும் அறிக்கையினால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு நல்ல முன்னேற்றம் கண்டது இன்று சந்தையில் முக்கியக் குறியீடுகள் வலுவான நிலையில் முடிந்ததற்கு ஒரு முக்கியக் காரணம் எனலாம்.

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1188 பங்குகள் விலை உயர்ந்தும், 1480 பங்குகள் விலை குறைந்தும், 149 பங்குகள் முந்தைய விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 3.7%
யெஸ் பேங்க் 3.5%
பஜாஜ் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் 2.5%
மஹிந்திரா & மஹிந்திரா 1.75%
ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் 1.7%
ஹௌசிங் டெவெலப்மென்ட் ஃபைனான்ஸ் 1.6%
கெயில் இந்தியா 1.6%
ஐ.சி.ஐ.சி.ஐ. ப்ரூடெண்டியால் 7.7%
எஸ்.பி.ஐ. லைஃப் 4%

விலை குறைந்த பங்குகள் :

ஹின்டால்க்கோ 7.3%
விப்ரோ 3.3%
இன்ஃபோசிஸ் 2.8%
டெக் மஹிந்திரா 2.7%
வேதாந்தா 2.5%
எச்.சி.எல். டெக்னாலஜிஸ் 2.4%