வெளியிடப்பட்ட நேரம்: 11:58 (25/04/2018)

கடைசி தொடர்பு:15:03 (25/04/2018)

`சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி!’ - சிறைக்கே சென்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது ஜோத்பூர் நீதிமன்றம்.

அசராம் பாபு

மத்தியப்பிரதேசம் சிந்த்வாரா பகுதியில் ஆசிரமம் நடத்திவருபவர் சாமியார் ஆசாராம் பாபு. இவர், கடந்த 2013-ம் ஆண்டு, ராஜஸ்தானில் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமைசெய்து கொலைசெய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் இருந்து வெளியே வந்த சாமியார், பின்னர்  2014-ம் ஆண்டு, குஜராத்தில் 2 சகோதரிகளைப் பாலியல் வன்கொடுமைசெய்த வழக்கில் சிக்கினார். இந்த வழக்கில், சாமியாரின் மகனும் உடன்பட்டிருந்தார். மேலும், உத்தரப்பிரதேச மாநிலம் முஷார்பர் நகரில், தனக்கு எதிராக சாட்சியம் அளித்த சமையல்காரர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கும் ஆசாராம் பாபு மீது தொடரப்பட்டது. 

இப்படி தொடர்ந்து சிக்கலில் மாட்டிக்கொண்ட ஆசாராம் பாபு, கைதுசெய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் இவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. எஸ்.சி / எஸ்.டி பாதுகாப்பு சட்டத்தின் சிறப்பு நீதிமன்றம், இவரின் வழக்கை விசாரித்து வந்தது.  இந்நிலையில், கடந்த ஏப்ரல் 7-ம் தேதியன்று இவர் மீதான வழக்கின் முழு விசாரணையும் முடிவடைந்து, அதற்கான தீர்ப்பு இன்று (ஏப்ரல் 25-04-18 ) அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை ஆசாராம் பாபு மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு பேருக்கு தண்டனை வழங்க ஜோத்பூர் சிறைக்கே நீதிபதிகள் சென்றனர். 

அங்கு, 2013 -ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில், ஆசாராம் பாபு உள்பட மூன்று பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மேலும், இருவர் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனையும் மற்ற இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கபட்டுள்ளது .சாமியார் குற்றவாளி என தீர்ப்பு வெளியானதையடுத்து, ராஜஸ்தான், குஜராத், அரியானா ஆகிய மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.