வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (25/04/2018)

கடைசி தொடர்பு:15:52 (25/04/2018)

கர்நாடகத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் என்ன சொல்கின்றன?

கர்நாடகத் தேர்தல் - சித்தராமையா - எடியூரப்பா

ர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி வெற்றிபெறும்பட்சத்தில், மூன்று பெரிய தென் மாநிலங்களில் ஒன்றில் ஆட்சியைப் பிடித்த பெருமையை அக்கட்சி பெறும். தவிர, 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழ்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பி.ஜே.பி. அடையும் வெற்றி, மோடி தலைமையிலான மத்திய அரசுக்கான மக்களின் நற்சான்றாகவே கருதப்படும். யூனியன் பிரதேசங்கள் தவிர்த்து தற்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒரே மாநிலம் கர்நாடகம் மட்டுமே. இம்மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலம் அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கான முன்னோட்டமாகக் கருதப்படும் என்பதால், அக்கட்சியும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளது.

மல்லிகார்ஜூன கார்கே கருத்து!

இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முழுமையான வெற்றிவாய்ப்பு உள்ளது என்றும், இம்மாநிலத்தில் முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் தற்போதைய முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் கட்சித் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், மல்லிகார்ஜூன கார்கேவின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கருத்துக் கணிப்புகள் சொல்வது என்ன?

இந்நிலையில் `டைம்ஸ் நவ்' மற்றும் 'வோட்டர்ஸ் மூட்' அமைப்பு இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பி.ஜே.பி. 89 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை 110 இடங்கள் வரை வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியமைப்பதற்கு 113 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

பகுஜன் சமாஜ் உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கும் முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களைக் கைப்பற்றும் என்றும், தேர்தலுக்குப் பின்னர், ஆட்சியமைப்பதில் முக்கியப் பங்காற்றும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தவிர, `இந்தியா டுடே' செய்திச் சேனல் நடத்திய கருத்துக்கணிப்பிலும் காங்கிரஸ் அல்லது பி.ஜே.பி. தனித்து ஆட்சியமைக்கக் கூடிய அளவுக்குத் தொகுதிகளைப் பெற இயலாது என்று தெரிவித்துள்ளது. பெரும்பான்மைக்குக் குறைவான இடங்களிலேயே இரு கட்சிகளும் வெற்றிபெறும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடியுடன் தேவேகவுடா

இதற்கிடையே மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரமேஷ் பாபு கூறுகையில், ``பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்கும். பி.ஜே.பி-யையோ அல்லது காங்கிரஸ் கட்சியையோ நாங்கள் ஆதரிக்க மாட்டோம். பி.ஜே.பி-யுடன் ரகசியக் கூட்டு என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறி வருவதில் எந்தவித உண்மையும் இல்லை" என்றார்.

கர்நாடகத்தில் போட்டியிடுவோர்...

கர்நாடக மாநிலத்தில் மே மாதம் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான காலம் முடிவடைந்துள்ளது. மனுத்தாக்கலுக்குக் கடைசி நாளான ஏப்ரல் 24-ம் தேதியுடன் மொத்தம் இரண்டாயிரத்து 407 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை மே 15-ம் தேதி நடைபெறும். 

பி.ஜே.பி, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களும், முக்கியத் தலைவர்களும் இப்போதே தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை நாட்டில் உள்ள 29 மாநிலங்களில் தற்போது 21 மாநிலங்களை ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர், பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சியை அகற்றி பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்துள்ளது. எனினும், நாடு முழுவதும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் மத்திய பி.ஜே.பி. அரசு தவறிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோன்ற சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தல் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்