வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (25/04/2018)

கடைசி தொடர்பு:19:10 (25/04/2018)

கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் பலியான விவகாரத்தில் டாக்டர் கஃபீல்கானுக்கு ஜாமீன்!

உத்தரபிரதேசம் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்த விவகாரத்தில் கைதான டாக்டர். கஃபீல்கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

காஃபீல்கான்

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள, பாபா பகவாந்தாஸ் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் குறைபாட்டால் இரண்டு நாள்களில் மட்டும் சுமார் 70 பச்சிளம் குழந்தைகள் பலியாகின. இந்தச் சம்பவம் மொத்த இந்தியாவையும் உலுக்கியது. அனைவரின் கவனமும் உத்தரபிரதேசத்தின் மீது திரும்பியது. 

இந்த விவகாரம் தொடர்பாக நடந்த விசாரணையில், மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்யும் நிறுவனத்துக்கு பணம் அளிக்காத காரணத்தால் சிலிண்டர் விநியோகம் நிறுத்தபட்டதாக தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ராஜீவ் மிஷ்ரா, குழந்தைகள் வார்டு பொறுப்பாளர் டாக்டர்.கஃபீல்கான் ஆகியோர் கைது செய்யபட்டனர். கஃபீல்கான் கைது தொடர்பான அறிகையில் ''இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு டாக்டர். கஃபீல்கான் செயல்படவில்லை. ஆகஸ்ட் 11-ம் தேதி முறையான அனுமதி பெறாமல் விடுப்பில் சென்றிருக்கிறார். ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து முறையான தகவலை  உயர் அதிகாரிகளுக்கு அளிக்கவில்லை'' எனக் கூறப்பட்டிருந்தது.

அவர் கைது செய்யப்பட்டு எட்டு மாதங்கள் ஆகியும் அவரை பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. சிறையில் இருக்கும் அவர் இந்த எட்டு மாதங்களில் 6 முறை ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஒவ்வொரு முறையும் அவரது ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கஃபீல்கான்  சிறையில் எழுதிய கடிதத்தை அவர் மனைவி ஊடகங்கள் முன் படித்துக்காட்டினார். அதில் யோகி ஆதித்யநாத் என்னைச் சந்தித்த பின் என் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. நிர்வாக கோளாறுகளை மறைப்பதுக்கு என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என எழுதப்பட்டிருந்தது.  இதையடுத்து, கஃபீல்கானுக்கு ஆதரவாகப் பல குரல்கள் சமூக வலைதளங்களில் உலாவரத்தொடங்கின. அதே நேரம் அவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு இன்று அலகாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதை ஏற்ற நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

முன்னதாக குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்த போது, டாக்டர் கஃபீல்கான் தனது சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கிப் பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.