வெளியிடப்பட்ட நேரம்: 20:44 (25/04/2018)

கடைசி தொடர்பு:20:48 (25/04/2018)

சர்ச்சைக்குரிய 'ராவணன் - சூர்ப்பனகை' கருத்து... மோடியின் எச்சரிக்கையை மீறிய பா.ஜ.க எம்.எல்.ஏ!

பி.ஜே.பி. பிரபலங்கள் பேசும் சர்ச்சைகள் குறித்த கட்டுரை

சர்ச்சைக்குரிய 'ராவணன் - சூர்ப்பனகை' கருத்து... மோடியின் எச்சரிக்கையை மீறிய பா.ஜ.க எம்.எல்.ஏ!

முன்பெல்லாம் எப்போதாவது, யாராவது, ஏதோ ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்லிச் சிக்கலில் மாட்டிக்கொள்வது வழக்கம். ஆனால், இப்போதோ குறிப்பிட்ட ஒருவரே தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை அடுத்தடுத்து சொல்லி, பிரபலமாகிவிடலாம் என்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதிலும், குறிப்பாக இந்த விஷயத்தில் பி.ஜே.பி. பிரபலங்களே முதலிடத்தில் உள்ளனர் என்றால், அது மிகையாகாது.

யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச பி.ஜே.பி-யினர்!

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாக்‌ஷி மகராஜ், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா, அமைச்சர் ஸ்வாதி சிங், பி.ஜே.பி. எம்.எல்.ஏ. சங்கீத் சோம் போன்றோரின் சர்ச்சைக்குரிய கருத்துகளையும், செயல்பாடுகளையும் உதாரணமாகக் கொள்ளலாம்.

யோகி ஆதித்யநாத் ஒருமுறை, ``சூரிய நமஸ்காரம், யோகாவை எதிர்ப்பவர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்ய மறுப்பவர்கள் கடலில் மூழ்க வேண்டும் அல்லது தங்கள் வாழ்க்கையை இருட்டு அறையில் வாழ வேண்டும்” என்று தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். 

இதன் தொடர்ச்சியாக, 2012-ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, பி.ஜே.பி-யைச் சேர்ந்த அமைச்சர்கள் செல்போனில் ஆபாசப்படம் பார்த்த சர்ச்சையும் வரலாற்றில் உண்டு. இப்படிக் காலங்காலமாகப் பி.ஜே.பி-யினர் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொள்வதைப் பார்த்து வருகிறோம். 

தமிழக பி.ஜே.பி-யினர்!

இந்த நிலையில், தமிழகத்தைப் பொறுத்தவரை பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளராக இருக்கும் ஹெச்.ராஜா, அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். கடந்த மாதம் பெரியார் சிலை குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் பூதாகரமாய் வெடிக்கவே... ``அந்தக் கருத்தை நான் பதிவிடவில்லை. என் அனுமதியின்றி என்னுடைய அட்மின் அதைப் பதிவிட்டிருந்தார்” என்றும் பின்னர் தெரிவித்தார். ஹெச்.ராஜாவின் இந்தச் சர்ச்சை அடங்குவதற்குள், காஷ்மீர் சிறுமி குறித்தும் அவர் தவறான கருத்தை ஊடகங்களில் பேசி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றியும், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பற்றியும் ட்விட்டர் பக்கத்தில் தரக்குறைவாகக் கருத்துத் தெரிவித்து, ஒட்டுமொத்த தி.மு.க-வினர் மட்டுமல்லாது, பெண்களின் எதிர்ப்பை எதிர்கொண்டார். அவரின் கருத்துக்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியதுடன், அவரைக் கைதுசெய்யச் சொல்லிப் புகார்களும் கொடுக்கப்பட்டன. 

பிஜேபி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா

இந்த நிலையில் நடிகரும், பி.ஜே.பி. உறுப்பினருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் பெண் நிருபர்கள் பற்றி மிகவும் கீழ்த்தரமான கருத்தைப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு ஊடகத் துறையினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அவருக்கு எதிராகவும் கண்டனக் குரல்கள் எழுந்தன. அவரையும் கைதுசெய்ய வேண்டும் என வழக்குத் தொடுக்கப்பட்டது. 

``நிறுத்திக்கொள்ள வேண்டும்!”

பி.ஜே.பி-யினர் பேசும் சர்ச்சை கருத்துகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, தன் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ-க்களுடன் செல்போன் செயலி வழியாகக் கடந்த சில நாள்களுக்கு முன் கலந்துரையாடினார். அப்போது அவர், ``நாம் தொடர்ந்து தவறுகள் செய்வதன்மூலம் ஊடகங்களுக்குத் தீனிபோட்டு வருகிறோம். ஊடகங்களின் கேமரா முன்பாக ஏதோ சமூக விஞ்ஞானிகள் போலவும், ஆய்வாளர்கள் போலவும் வார்த்தைகளைக் கொட்டுகிறோம். பயங்கரவாதம், பாலியல் வன்கொடுமை என்று எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நாம் வாய் தவறி கூறும் வார்த்தைகள் ஊடகங்களில் பெரிதாக்கப்படுகின்றன. இதுபற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் நாம், நமது கருத்துகளைத் தொடர்ந்து கூறி வருகிறோம். இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகிவருகிறது. எனவே, பொறுப்பற்ற முறையில் அர்த்தமற்ற கருத்துகள் தெரிவிப்பதையும், ஆர்வக்கோளாறில் கருத்துகள் கூறுவதையும் உடனடியாக நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதற்காக ஊடகங்களை நாம் குறைகூறக் கூடாது” என்றார். 

நரேந்திர மோடி

பிரதமர் மோடியின் இந்தக் கருத்தை, சிவசேனா கட்சி கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. இதுகுறித்து, அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான `சாம்னா'வில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில், ``இதுபோன்ற அறிவுரைகளைப் பிரதமர் மோடி, இதற்குமுன் தனது எம்.பி-க்களுக்குப் பலமுறை கூறியிருக்கிறார். பி.ஜே.பி. எம்.பி-க்கள் அனைவரும் பிரதமர் மோடி பேசுவதைப் பார்த்து, அவரைப் பின்பற்றி அப்படியே பேசுகிறார்கள். அதாவது, பிரதமர் மோடி தனது சிந்தனையில் என்ன தோன்றுகிறதோ, அதை ஆய்வுசெய்யாமல் பேசுகிறார்; அதைப்போலவே அவருடைய கட்சி எம்.பி-க்களும் பேசுகிறார்கள். மோடியின் பேச்சு இன்னும் ஊடகங்களின் செய்திக்கு மசாலா சேர்ப்பது போன்றுதான் இருக்கிறது” என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேச பி.ஜே.பி. எம்.எல்.ஏ. சுரேந்திரா சிங், ``மேற்கு வங்கத்தின் சூர்ப்பனகை மம்தா பானர்ஜி.. ராவணன் காங்கிரஸ்” என்று கூறியுள்ளார். இது, நாடு முழுவதும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ``தவறான கருத்துகளால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது” என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தும், அதை பி.ஜே.பி-யினர் பொருட்படுத்தாமல், வாய்க்கு வந்தபடி பேசிவருவது தொடர்கதையாகவே இருந்துவருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்