ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் சிக்கிய பள்ளி வாகனம்! 13 குழந்தைகளின் உயிரைப் பறித்த எக்ஸ்பிரஸ் ரயில்! | school van met accident when crossing an unmanned railway crossing

வெளியிடப்பட்ட நேரம்: 09:01 (26/04/2018)

கடைசி தொடர்பு:09:13 (26/04/2018)

ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் சிக்கிய பள்ளி வாகனம்! 13 குழந்தைகளின் உயிரைப் பறித்த எக்ஸ்பிரஸ் ரயில்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை பள்ளி வாகனம் ஒன்று கடக்க முயன்றபோது, ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 13 பள்ளி குழந்தைகள் பலியாகினர்.  

பள்ளி வாகனம் விபத்து

Photo: ANI

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் பகுதியில் உள்ள கிராமத்தில், ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை இன்று காலை பள்ளி வாகனம் ஒன்று கடக்க முயன்றபோது அந்த வழியே வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பள்ளி வாகனத்தில் இருந்த 13 பள்ளிக் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. 

இந்நிலையில், உ.பி முதல்வர் யோகி ஆதித்தியநாத், இந்தக் கோர விபத்துக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். பலியான குழந்தைகள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ள முதல்வர், விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். 13 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.