வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (26/04/2018)

கடைசி தொடர்பு:20:14 (26/04/2018)

சென்செக்ஸ், நிஃப்டி இன்று நல்ல முன்னேற்றம் 

சிறிது பாசிட்டிவான தொடக்கத்திற்குப் பின் நெடுநேரம் ஒரு குறுகிய பாதையிலேயே பயணித்த இந்தியப் பங்குச் சந்தை இன்று வர்த்தகம் முடியும் முன்னர் கடைசி ஒரு மணி நேரத்தில் வெகுவாக முன்னேறி நல்ல லாபத்துடன் முடிவுற்றது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 212.33 புள்ளிகள், அதாவது 0.62 சதவிகிதம் உயர்ந்து 34,713.60 என முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி 47.25 புள்ளிகள், அதாவது 0.45 சதவிகிதம் உயர்ந்து 10,617.80-ல் முடிவுற்றது.

நேற்று அமெரிக்கச் சந்தையிலும் இன்று பெரும்பாலான ஆசியச் சந்தைகளிலும், பங்குகளை வாங்க ஊக்குவிக்கும் விதமாகப் பெரிய அளவில் ட்ரிகர் எதுவும் இல்லாததால் ஒரு பெரிய மாறுதல் ஏற்படவில்லை. 

மேலும் ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகளின் மானிட்டரி பாலிசி அறிக்கைகள் வரவிருப்பதாலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் முன்னம் எதிர்பார்த்ததை விட விரைவிலேயே உயர்த்தப் படலாம் என்ற யூகம் காரணமாகவும் பங்குகளை வாங்குவதில் பெரிய ஆர்வம் காணப்படவில்லை.

Futures & Options எக்ஸ்பைரி காரணமாக சில பங்குகள் விலை உயர்ந்தன. 

யெஸ் பேங்க்-ன் காலாண்டு செயல்பாடு பற்றிய அறிக்கை சிறப்பாக அமைந்ததால், யெஸ் பேங்க் பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்தது மட்டுமன்றி மேலும் சில வங்கிப் பங்குகளும் விலையுயர்ந்தன.

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு 66.90 என்ற 14 மாதத்திய லோ -விற்கு சரிந்த பின்னர் சற்று சுதாரித்து 66.80 என்ற நிலையில் மதியம் வர்த்தகம் ஆகிக்கொண்டிருந்தது. 

கச்சா எண்ணெய் தொடர்ந்து 2014 நவம்பர் மாதத்தின் உயரத்திலேயே இருந்து வருவதும், இந்தியப் பங்குச் சந்தையில் இன்று ஒரு பெரிய தொய்வினை உண்டாக்கவில்லை. இருப்பினும், முதலீட்டாளர்களின் மனநிலை ஒரு பாதுகாப்பு உணர்வுடனேயே இருந்தது எனலாம்.

அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு இன்று சிறிதளவு உயர்ந்தாலும், தொடர்ந்து அதன் 14-மாதத்திய லோ லெவெலிலேயே இருந்து வருவதால், தகவல் தொழில் நுட்பத் துறை பங்குகள் முன்னேற்றம் கண்டன.

எப்.எம்.சி.ஜி மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் சில விலையுயர்ந்தன. டெலிகாம் துறை பங்குகள் கீழிறங்கின. கேப்பிடல் கூட்ஸ், ரியல் எஸ்டேட், பவர், ஆயில் மற்றும் மெட்டல் துறைகளில் ஒரு கலப்படமான நிலை காணப்பட்டது.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

யெஸ் பேங்க்  10.1%
இந்தஸ்இந்த் பேங்க் 2%
ஹிந்துஸ்தான் யூனிலீவர் 2%
ஐ.டி.சி   1.7%
எய்ச்சேர் மோட்டார்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ்,
கோடக் பேங்க், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் அதானி போர்ட்ஸ் 1.3 - 1.7 சதவிகிதம் 

விலை குறைந்த பங்குகள் :

பார்தி ஏர்டெல்  3%
பார்தி இன்ஃப்ராடெல்  2.5%
லூப்பின் 2.6%
விப்ரோ 2.4%
ஸ்டேட் பேங்க் 1.6%
ஆக்ஸிஸ் பேங்க் 1.5%

இன்று மும்பை பங்குச்சந்தையில் 1105 பங்குகள் விலை உயர்ந்தும், 1507 பங்குகள் விலை குறைந்தும், 158 பங்குகள் முந்தைய விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.