வெளியிடப்பட்ட நேரம்: 20:04 (26/04/2018)

கடைசி தொடர்பு:20:04 (26/04/2018)

கர்நாடகாவில் தலைவர்கள் தீவிரப் பிரசாரம்; வேட்பாளர்களுடன் மோடி ஆலோசனை!

மோடி

''அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தரப் பகைவனும் இல்லை" என்பதற்கேற்ப, எப்போது வேண்டுமானாலும் மாற்றுக் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெறலாம் என்கிற போக்கு அரசியல் கட்சியினரிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது.

கர்நாடக மாநிலத்திலும் மாற்றுக் கட்சியில் இணைந்து தேர்தலில் சீட் பெறுவது என்பது தொடர்கதையாகி உள்ளது. இம்மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, பல்வேறு கட்சிகளிலுமிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்தது. 

கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளை எல்லாம் பற்றிக் கவலைப்படாமல், 'எங்களுக்குத் தேவை தேர்தலில் போட்டியிட சீட்' என்ற ஒரே குறிக்கோளுடன் அவர்கள் கட்சித்தாவலில் ஈடுபடுகிறார்கள். அதிலும் கர்நாடகத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத பலர், மாற்றுக் கட்சிகளில் இணைவது தொடர்ந்துகொண்டிருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் காங்கிரஸ், பி.ஜே.பி. மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்) கட்சிகளைச் சேர்ந்த பலரும் பரஸ்பரம் ஒரு கட்சியிலிருந்து மற்ற கட்சிகளில் இணைந்து வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்கள் :

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஜமீர் அகமது, அகண்ட சீனிவாஸ் மூர்த்தி உள்பட இதரக் கட்சிகளைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏ-க்களும், பி.ஜே.பி.-யைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் அவரவர் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி

பி.ஜே.பி-யில் இணைந்தவர்கள் : 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாலிகையா குத்தேதார், ஏ.எஸ். பாட்டீல் உள்பட 6 எம்.எல்.ஏ-க்கள், சுயேச்சை எம்.எல்.சி. பசன கௌடா பாட்டீல் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் உள்பட ஏராளமானோர் பி.ஜே.பி.-யில் இணைந்தனர். ஜே.டி.(எஸ்) மூத்தத் தலைவர் பிரீத்தம் நாகப்பா, காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள் பசவராஜ் பாட்டீல் அன்வாரி, நாகப்பா சலோனி ஆகியோரும் பி.ஜே.பி-யில் இணைந்தனர். இவர்களில் பலருக்கும் பி.ஜே.பி. சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜே.டி.(எஸ்)-ல் இணைந்தவர்கள் : 

காங்கிரஸ், பி.ஜே.பி-யைப் போன்றே மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலும் மற்றக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இணையும் படலம் அரங்கேறியது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் எச். விஸ்வநாத், பி.ஜே.பி-யைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ரேவுநாயக் பெலமகி, ஆனந்த் அஸ்னோதிகர், முன்னாள் எம்.எல்.ஏ பிரகாஷ் கண்ட்ரே உள்ளிட்டோர் இணைந்துள்ளர். காங்கிரஸ், பி.ஜே.பி-யைப் பின்பற்றி, மாற்றுக் கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கு மதச்சார்பற்ற ஜனதா தளத்திலும் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தீவிரமடைந்த தேர்தல் பிரசாரம்

இதற்கிடையே, கர்நாடகத்தில் அடுத்த மாதம் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருப்பதை முன்னிட்டு, முக்கியக் கட்சிகளில் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்களின் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநில பி.ஜே.பி. நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடன் பிரதமர் மோடி, தனது செயலி மூலம் டெல்லியில் இருந்தபடியே கலந்துரையாடினார். மே முதல் தேதி தொடங்கி பல்வேறு தொகுதிகளிலும் மோடி சுற்றுப்பயணம் செய்து பி.ஜே.பி. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார். 15 முதல் 20 இடங்களில் நடைபெறும் பி.ஜே.பி. பேரணியில் மோடி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தியைப் பொறுத்தவரை காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் சித்தராமையாவுடன் இணைந்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். வடக்கு கர்நாடகத்தில் அடங்கிய அங்கோலா, ஹன்னோவர், பட்கல் ஆகிய இடங்களில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான ஜே.டி. (எஸ்) கட்சியின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களும் இப்போதே மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும்,மக்கள் பிரதிநிதிகளின் தலையாய கடமை என்ன என்பதை தேர்தலில் வெற்றி பெறுவோர் உணர்ந்தால் மட்டுமே மக்களுக்கு நன்மை பயக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்