வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (27/04/2018)

கடைசி தொடர்பு:16:20 (27/04/2018)

'ஷாகா நடத்த அனுமதி கொடுங்கள்!' - அலிகார் பல்கலைக்குக் கடிதம் எழுதிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்

'ஆர்.எஸ்.எஸ்  அமைப்பைப் பற்றி மாணவர்கள் மத்தியில் தவறான கருத்துகள் பரப்பப்பட்டுவருகின்றன. இதைப்பற்றி விளக்குவதற்கு எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஒருவர். 

முகமது அமீர் ரஷீத்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்மீது எதிர்க்கட்சிகள் பலவும் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகின்றன. ' ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்களுடைய நோக்கம் என்று கூறிவரும் ஆர்.எஸ்.எஸ், நடைமுறையில் அவ்வாறு நடந்துகொள்வது இல்லை' என்ற விமர்சனம் கிளம்பியுள்ளது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் சேர்ந்த முகமது அமீர் ரஷீத் என்பவர், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், 'ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்ற கருத்து பரப்பப்பட்டுவருகிறது. இது முற்றிலும் தவறானது. மத பாகுபாடு இல்லாமல், தேசிய சேவையில் ஆர்.எஸ்.எஸ் முழுமையாக அர்ப்பணித்துச் செயல்பட்டுவருகிறது.

இருப்பினும், மாணவர்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பற்றித் தவறான கருத்துகள் நிலவிவருகின்றன. எனவே, பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஷாகா தொடங்க அனுமதி கொடுங்கள்' எனக் கோரிக்கை வைத்திருக்கிறார். இதுகுறித்து ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ., அலிகார் தல்வீர் சிங், ' வளாகத்தில் ஷாகா நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், அதில் யாரும் கலந்துகொள்வதில்லை' என்றார்.