தொடர்ந்து மாயமாகும் இளம்பெண்கள்... அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாள்களாகத் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்ற இளம்பெண்கள் காணாமல் போய் உள்ளனர். இது குறித்து அவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

திருவள்ளூர் அடுத்த கரிக்கலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவரின் மகள்கள் பிரியதர்ஷினி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 23-ம் தேதி வேலைக்குச் சென்றவர் வீட்டுக்கு வரவில்லை. இது குறித்து காமராஜ், திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதேபோல வெள்ளவேடு அருகில் உள்ள ஜமீன் கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் மகள் சிவரஞ்சனி அவரின் சித்தி வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார்.

இது குறித்தும் அவர் தந்தை வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி இவர் மகள் கலைவாணி. தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 23-ம்தேதி கல்லூரிக்குச் சென்றவர் வீட்டுக்கு வரவில்லை என்று புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசு மகள் வார்ஷா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 23-ம்தேதி வேலைக்குச் சென்றவர் வீட்டுக்கு வரவில்லை என்று புகார் செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாள்கள் முன்பு திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், கடந்த 10-ம் தேதி வேலைக்குச் சென்றவர் வீட்டுக்கு வரவில்லை. தன் மனைவிக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் சொல்லியிருக்கிறார். அதில் என்னைத் தேடாதே அப்பா, அம்மா, குழந்தைகளை பத்திரமாகப் பார்த்துக்கொள் என்று ஆடியோ மெசேஜ் அனுப்பியுள்ளார். இது குறித்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுபோல புகார்கள் அடிக்கடி வந்துகொண்டே இருக்கின்றன. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது குறித்து மாவட்டச் சமூக நலத்துறை அதிகாரிகள் சிலரைக் கேட்டபோது, "மாவட்டத்தில் பல தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கிராமப்புறங்களுக்கே சென்று வேலைக்கு ஆட்களைத் தனியார் நிர்வாகம் பஸ் மற்றும் வேன்களில் குறைந்த சம்பளத்துக்கு வேலை ஆட்களை அழைத்து வந்து திரும்பவும் கொண்டு போய் விடுகிறார்கள். அப்போது ஏற்படும் பழக்கம் காதல் வலையில் சிக்கி விடுகின்றனர். பின்னர், வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப்போய் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கித்தராமல் இருந்தாலே பெண்கள் வீட்டைவிட்டு வெளியே போக மாட்டார்கள். பெண்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளைப் பெற்றோர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்" என்றனர்.

 

இளம் பெண்கள் காணாமல் போனது குறித்து திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியிடம் கேட்டதற்கு, ''காணாமல் போகும் பெண்கள் குறித்து பெற்றோர்கள் தரும் புகார்களைப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தவதுடன் அவர்களைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கிறோம். அவர்களின் செல்போன் மூலம் அவர்கள் இருக்கும் இடங்களைக் கண்காணித்து அவர்களைக் கண்டுபிடிக்கிறோம். இந்த வருடம் அதாவது 1.1.2018 -லிருந்து இன்று வரை 37 பெண்கள் காணாமல் போய்விட்டனர். அதில் 32  பேரைக் கண்டுபிடித்து தந்துள்ளோம். மற்றவர்களைக் கண்டு பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது" என்றார். 

 

 

 

 

''பெண் பிள்ளைகளுடன் பெற்றோர்கள் மனம்விட்டு பேச வேண்டும். சமூகத்தின் அவலங்களைப் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். தவறு நடக்காத வகையில் பிள்ளைகளை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். பெண்கள் பிள்ளைகள் கெட்டுப்போவதற்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்களும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது'' என்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் தேவராஜ். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!