''ஒவ்வொரு முறையும் பாலியல் வன்முறை செய்தி கேட்டு வேதனைப்படுகிறேன்'' - அனுஷ்கா ஷர்மா | ''i feel hurt when i heared sexual abuse news'' - says anuskasharma

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (27/04/2018)

கடைசி தொடர்பு:17:00 (27/04/2018)

''ஒவ்வொரு முறையும் பாலியல் வன்முறை செய்தி கேட்டு வேதனைப்படுகிறேன்'' - அனுஷ்கா ஷர்மா

குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு ஈடுபடுத்தும் குற்றவாளிகளுக்கு அரேபிய நாடுகளில் கொடுப்பதுபோன்ற மிகக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.

''ஒவ்வொரு முறையும் பாலியல் வன்முறை செய்தி கேட்டு வேதனைப்படுகிறேன்'' - அனுஷ்கா ஷர்மா

காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டத்தின் 8 வயதுச் சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை... உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ உள்ளிட்ட 5 பேரால், மைனர் பெண் பலாத்காரம்... சூரத் நகரில் 11 வயதுச் சிறுமி 8 நாள்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, உடலில் 87 காயங்களுடன் சடலமாகக் கண்டுபிடிப்பு என நாடு முழுவதும் பெண்களுக்கான பாலியல் வன்முறை அன்றாட நிகழ்வாகி வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்கள் மக்கள் மனதில் பெரும் அச்சுறுத்தலையும் சமூக ஆர்வலர்களிடம் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, 'குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்' என போக்சோ சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலானோர் இதற்கு வரவேற்பு அளித்தாலும், 'இதுபோன்ற சட்டம், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்குப் பொருந்தலாம். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் சாத்தியமில்லை. இது, கண்துடைப்பாகவே மாறும்' என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 25-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகையும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, போக்சோ சட்டம் குறித்துப் பேசியிருக்கிறார்.

அனுஷ்கா

''நான் போக்சோ சட்டத்தை 100 சதவிதம் அல்ல, 1000 சதவிகிதம் வரவேற்கிறேன். இந்தியாவின் உண்மையான ஒவ்வொரு குடிமகனையும் குழந்தைகளின் பாலியல் வன்முறை பற்றிய தகவல்கள் நிச்சயம் பாதிக்கும். நான் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற தகவல்களைக் கேட்கும்போது மிகவும் வேதனைப்படுகிறேன்; தலைகுனிவாகவும் நினைக்கிறேன். தனக்கு என்ன நடக்கிறது என்பதையே புரிந்துகொள்ள முடியாத குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், மனிதக் குலத்தின் கேவலமான தலைகுனிய வேண்டிய செயல். இத்தகைய குற்றவாளிகளுக்கு அரேபிய நாடுகளில் கொடுப்பதுபோன்ற மிகக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் இந்த போக்சோ சட்டம் எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது'' என்றார்.

போக்சோ சட்டத்தின் சிறப்பம்சங்கள்:

12 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளைப் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்குக் குறைந்தபட்ச சிறைத் தண்டனை 20 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. குற்றத்தின் தீவிரத்துக்கு ஏற்ப, வாழ்நாள் சிறை அல்லது மரண தண்டனையாகவும் அளிக்க முடியும்.

16 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பலாத்காரம் செய்பவர்களுக்குக் குறைந்தபட்ச சிறைத் தண்டனை 10 ஆண்டுகளாக முன்பு இருந்தது. இனி 20 ஆண்டுகளாக இருக்கும். மேலும், இதை வாழ்நாள் சிறைத் தண்டனையாகவும், சாகும் வரை சிறையில் இருக்கும் வகையிலும் மாற்றப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்கவும், சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, பலாத்கார வழக்குகளுக்கு 7 முதல் 10 ஆண்டுகள் வரை மட்டும் தண்டனை விதிக்கப்பட்டது. இனி, அது வாழ்நாள் சிறைத் தண்டனையாக இருக்குமாறு மாற்றப்பட்டுள்ளது.

அனைத்துவிதமான பாலியல் பலாத்கார வழக்குகளையும் 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டுக்குச் சென்றால், 6 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்.

16 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பலாத்காரம் செய்தல் அல்லது கூட்டுப் பலாத்காரக் குற்றச்சாட்டில் சிக்குபவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட மாட்டாது.


டிரெண்டிங் @ விகடன்