டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்! | AIIMS resident Doctors on Indefinite Strike

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (27/04/2018)

கடைசி தொடர்பு:19:00 (27/04/2018)

டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவரை, பேராசிரியர் தாக்கியதால் அவரைப் பணி நீக்கம் செய்யும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

எய்ம்ஸ்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, நாட்டில் உள்ள சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நாடு முழுவதிலுமிருந்து ஒரு நாளுக்குச் சுமார் 8,000 பேர் அங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த மருத்துவமனையில் தற்போது மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 25-ம் தேதியன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் பேராசிரியராக இருக்கும் அதுல்குமார் தனக்குக் கீழ் பயிற்சி மருத்துவராகப் பணிபுரியும் ஒரு மருத்துவரை அனைத்து ஊழியர்கள் மற்றும் சக மருத்துவர்கள் முன்னிலையில் அறைந்துள்ளார். இந்தச் சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து தனது தவற்றை உணர்ந்த பேராசிரியர், பயிற்சி மருத்துவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும் இந்தப் பிரச்னை ஓயவில்லை. பயிற்சி மருத்துவரைத் தாக்கிய பேராசிரியரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்.டி.ஏ (Resident Doctors’ Association) அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பேராசிரியரைப் பதவி நீக்கம் செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும்; மற்ற சிகிச்சைகளை மேற்கொள்ளப் போவதில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆ.டி.ஏ, எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா- வுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில்,''மருத்துவர் அதுல்குமாரின் செயல் கண்டனத்துக்குரியது. அவரின் செயலால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இனி அவரால் எந்தத் துறையிலும் இயல்பாகப் பணியாற்ற முடியாது. எனவே, அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.