வெளியிடப்பட்ட நேரம்: 17:36 (27/04/2018)

கடைசி தொடர்பு:17:58 (27/04/2018)

தொடர்ந்து இரண்டாவது நாளாக சந்தையில் நல்ல முன்னேற்றம் 

சர்வதேச சந்தைகளில் நிலவிய உற்சாகமான மனநிலை காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை சிறிது குறைந்தது மற்றும் ஜியோபொலிட்டிக்கல் டென்ஷன் பற்றிய கவலை சிறிது குறைந்ததனாலும், இன்று இந்தியப் பங்குச் சந்தை வெகுவாக முன்னேறியது.

கடந்த இரு மாதங்களில் முதல் முறையாக இன்று சென்செக்ஸ் 35,000 புள்ளிகள் என்ற இலக்கைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 256.10 புள்ளிகள், அதாவது 0.74 சதவிகிதம் உயர்ந்து 34,969.70 என முடிந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 74.505 புள்ளிகள், அதாவது 0.70 சதவிகிதம் உயர்ந்து 10,692.30-ல் முடிவுற்றது.

பங்குச்சந்தை நிலவரம்

சில சிறப்பான காலாண்டு செயல்பாடு பற்றிய அறிக்கைகளினாலும், உற்சாகமூட்டும்படி அமைந்த பொருளாதார அறிக்கைகளாலும், அரசு பத்திரங்களிலான முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருவாய் சற்று குறைந்ததினாலும் அமெரிக்கச் சந்தையில் நேற்று பங்குகள் வெகுவாக விலை உயர்ந்தன. 

இதையடுத்து இன்று ஆசியப் சந்தைகளிலும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகளின் மானிட்டரி பாலிசிகள் எதிர்பார்த்த வண்ணம் இருந்ததாலும் சில நல்ல காலாண்டு நிதி அறிக்கைகளாலும் பங்குகள் உயர்ந்தன.

சமீப தினங்களில் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்த பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் இன்று நல்ல முன்னேற்றம் கண்டது சந்தையின் இன்றைய உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணம்.

டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு ஸ்டேபிள் ஆக இருந்ததும், கச்சா எண்ணெய் சிறிது விலை குறைந்ததும் சந்தையின் உயர்வுக்கு உதவியது.

முதன் முறையாக ஆக்ஸிஸ் வங்கி தன்னுடைய காலாண்டு செயல்பாட்டில் நஷ்டம் அடைந்திருந்தாலும் அவ்வங்கியின் பங்குகள் இன்று நல்ல முன்னேற்றம் கண்டன. வாரா சொத்துகள் அதிகமானாலும், இந்த நெகடிவ் ஃபேக்டரி வங்கியின் ரெகவரி இனி தொடங்க வாய்ப்புள்ளது என்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதால் இப்பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தினர்.

கேப்பிடல் கூட்ஸ் மற்றும் ஆயில் நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. மருத்துவம் மற்றும் மெட்டல் துறைகளில் சில பங்குகள் முன்னேற்றம் கண்டன. தகவல் தொழில் நுட்பத் துறை பங்குகள் இன்று தொய்வுடன் காணப்பட்டன. ஆட்டோமொபைல், பவர், ரியல் எஸ்டேட் மற்றும் எப்.எம்.சி.ஜி துறைகளில் இன்று ஒரு கலப்படமான போக்கு இருந்தது.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

ஆக்ஸிஸ் பேங்க் 9.3%
ஸ்டேட் பேங்க் 4.3%
ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க். 3.3%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 3.2%
சன் பார்மா 2.5%
பஜாஜ் ஆட்டோ 2.3%
லார்சென் & டூப்ரோ 2.3%
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.2%
எம்.ஆர்.எப் 5.1%
பவர் ஃபைனான்ஸ் 4.3%
பேங்க் ஆப் பரோடா 3.75%
ஹிந்துஸ்தான் ஜின்க் 3.7%
 


விலை குறைந்த பங்குகள் :

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் 3.3%
டெக் மஹிந்திரா 3%
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 2.3%
மாருதி சுஸுகி 2%
விப்ரோ 1.8%

இன்று மும்பை பங்குச்சந்தையில் 1407 பங்குகள் விலை உயர்ந்தும், 1226 பங்குகள் விலை குறைந்தும், 138 பங்குகள் முந்தைய விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.