'அரசுக்கு எதிராகப் பிறப்பித்த உத்தரவுதான் காரணமா?’ - நீதிபதி நியமனத்தில் ப.சிதம்பரம் கேள்வி | P.Chidambaram raises question over Govt objection to Justice Joseph's elevation

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (27/04/2018)

கடைசி தொடர்பு:21:00 (27/04/2018)

'அரசுக்கு எதிராகப் பிறப்பித்த உத்தரவுதான் காரணமா?’ - நீதிபதி நியமனத்தில் ப.சிதம்பரம் கேள்வி

உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு கொலிஜியம் பரிந்துரை செய்த கே.எம்.ஜோசப்பை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதற்கு காரணம் அவர் மத்திய அரசுக்கு எதிராகக் கூறிய தீர்ப்பா? என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் உள்ள கொலிஜியம் குழுவில் இரு நீதிபதிகள் குறைவதால், மற்ற நீதிபதிகள் இணைந்து மற்ற மாநிலங்களில் உள்ள இரண்டு நீதிபதிகளின் பெயரை பரிந்துரை செய்தனர். ஒருவர் இந்து மல்கோத்ரா. இவர் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றினார். மற்றொருவர் கே.எம்.ஜோசப். கேரளாவைச் சேர்ந்த இவர் உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றால் மட்டுமே இவர்கள் பதவி உயர்வு பெறமுடியும். அதன் படி கடந்த ஜனவரி மாதம் கொலிஜியம் இந்த இருவரையும் பரிந்துரை செய்தது. பரிந்துரை செய்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் அது பற்றி மத்திய அரசு எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனால் நீதித்துறைக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நிலவியது.

இந்நிலையில் நேற்று கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு இந்து மல்கோத்ரவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் வழங்கியது. அதே நேரத்தில் நீதிபதி கே.எம் ஜோசப் மீதான பரிந்துரையை நிராகரித்தது. இதற்கு விளக்கமளித்த மத்திய அரசு, ‘ஜோசப்பின் பதவி உயர்வு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் நிர்ணயிக்கப்பட்ட அம்சங்களின் கீழ் வரவில்லை. மேலும், உயர் பதவிகளில் கேரள மாநிலத்துக்கு உரியப் பிரதிநிதித்துவம் முன்னரே உள்ளதாகவும் தெரிவித்தது.’இந்த நிராகரிப்பு நீதித்துறையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் “உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்த நீதிபதியை நியமிக்க அரசு மறுப்பதற்கு என்ன காரணம்? நீதிபதியின் மாநிலமா அல்லது மதமா? அல்லது அவர் அரசுக்கு எதிராக பிறப்பித்த நீதிமன்றத் தீர்ப்பா?. அன்று தமிழ்நாட்டைச் சார்ந்த  கோபால் சுப்பிரமணியம் மறுக்கப்பட்டார். இன்று கேரளத்தைச் சார்ந்த திரு கே.எம். ஜோசப் மறுக்கப்படுகிறார். ஏன்?” எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 

கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வந்ததால் அங்குக் குடியரசு தலைவர் ஆட்சியை, மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் மத்திய அரசின் இந்த உத்தரவை, அப்போது உத்தராகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.எம் ஜோசப் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். ஜோசப் மீதான உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்தை மத்திய அரசு ரத்து செய்ததுக்கு இதுதான் காரணம் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.