உச்ச நீதிமன்ற பெண் நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் இந்து மல்கோத்ரா யார்? | The first woman Indu Malhotra who was appointed directly from bar council as supreme court judge

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (27/04/2018)

கடைசி தொடர்பு:11:35 (28/04/2018)

உச்ச நீதிமன்ற பெண் நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் இந்து மல்கோத்ரா யார்?

உச்ச நீதிமன்ற பெண் நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் இந்து மல்கோத்ரா யார்?

ந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டு 68 ஆண்டுகளாகின்றன. இத்தனை ஆண்டுகால உச்ச நீதிமன்ற வரலாற்றில், அதிகபட்சமாக ஆறு பேர் பெண் நீதிபதிகளாக இருந்துள்ளனர். ஆனால், இப்போது ஏழாவது பெண் நீதிபதியாக இந்து மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுவரை உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள். இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்து மல்ஹோத்ரா மட்டும்தான் வழக்கறிஞராக இருந்து நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்.  

யார் இந்த இந்து மல்ஹோத்ரா?

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் மல்ஹோத்ரா மற்றும் சத்யா மல்ஹோத்ராவுக்கு 1956-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி மகளாய் பிறந்தவர் இந்து மல்ஹோத்ரா. உச்ச நீதிமன்றத்தில் மூத்த பத்திரிகையாளராக ஓம் பிரகாஷ் பணியாற்றினார். இவர், தொழில் தகராறு சட்டத்தைப் பற்றிய ஆய்வை வெளியிட்டவர்.

இந்து மல்ஹோத்ரா

இந்து மல்ஹோத்ரா டெல்லியில் உள்ள கார்மெல் கான்வென்ட் பள்ளியில் படித்தார். 'லேடி ஶ்ரீ ராம் கல்லூரியில்' அரசியல் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் முதுகலைப் பட்டம் படித்தார். பின்னர், 1983-ஆம் ஆண்டு முதல் சட்டப் பயிற்சி பெறத் தொடங்கினார். அதே ஆண்டில் டெல்லி பார் கவுன்சில் உறுப்பினராகச்  சேர்ந்தார் இந்து. 1988-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யக்கூடிய வழக்கறிஞர்களில் முதல் ஆளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007-ஆம் ஆண்டு அவர் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஹரியானா மாநிலத்துக்கு சட்ட ஆலோசகராகவும், டெல்லி மேம்பாட்டு ஆணையம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், செபி மற்றும் வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் போன்ற அமைப்புகளில் சட்ட பிரதிநிதியாக பதவி வகித்துள்ளார்.

மாவட்ட நீதிமன்றங்களில் வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை விசாரிக்கும் குடும்ப நல நீதிமன்றங்களில் சிறப்பு பிரதிநிதியாக இந்து மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார். சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதற்கான வழிமுறைகளையும் அவர் வகுத்து கொடுத்தார். பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை விசாரிக்கும் குழுவான 'விசாகா கமிட்டி' உறுப்பினராகவும் இருந்தார். மேலும், நீதிமன்றங்களில் ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை விசாரிக்கும் பத்து நபர் கொண்ட குழுவிலும் இவர் உறுப்பினராக பணியாற்றினார். சினிமாத் துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாகுபாடுகளுக்குத் தீர்வுகாணும் ஆலோசகராகவும் இருந்துள்ளார். மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் தொடர்பான கல்வி விவகாரங்கள் குறித்த வழக்குகளில் தொடர்ச்சியாக தன்னுடைய பணியை ஆற்றியுள்ளார்.

பெண் நீதிபதிகள்

உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த பெண் வழக்கறிஞராக இவர் 2007-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே 1977-ஆம் ஆண்டு லெய்லா சேத், மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட பின்னர், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்து மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார். 1950-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்ட பின்னர், முதல் பெண் நீதிபதியாக 1989-ஆம் ஆண்டு பாத்திமா பீவி நியமிக்கப்பட்டார். என்றாலும், எந்தவொரு கீழ் நீதிமன்றங்களிலும் நீதிபதியாக பதவிப் பொறுப்பு வகிக்காமல் வழக்கறிஞராக இருந்த ஒருவர் நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள பெருமை இந்து மல்ஹோத்ராவுக்கு கிடைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய இதர பெண் நீதிபதிகள் சுஜாதா மனோகர், ரூமா பால், ரஞ்சனா தேசாய், ஞானசுதா மிஸ்ரா மற்றும் பானுமதி ஆகியோர் ஆவர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பணியிடத்திற்கு நியமிக்கப்படுவதற்கு இரண்டு நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைசெய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் இந்து. இன்னொருவர் உத்தரகாண்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப். இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்து, இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரிவரை நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பு அண்மைக்காலமாக கேள்விக்குறியாகி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியாவின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக ஒரு பெண் பதவியேற்றிருப்பதற்கு, இந்தியப் பெண்கள் மட்டுமல்லாது, அனைத்து மக்கள் சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவிப்போம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்