தலைமை வழக்கறிஞர் ஆட்சேபம்! - காவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்ட மனுவைத் திரும்பப் பெற்ற மத்திய அரசு

காவிரி தொடர்பாக வரைவு செயல் திட்டத்தைத் தாக்கல் செய்ய மேலும் 2 வாரங்கள் அவகாசம் கோரிய மனுவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட காவிரி தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, அதற்காக 6 வார காலம் அவகாசம் அளித்தது. நீதிமன்றம் அளித்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசு, 'ஸ்கீம்' என்பதற்கு விளக்கம் கேட்டு புதிய மனு  தாக்கல் செய்தது. இதற்கிடையே மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது தமிழக அரசு. அந்த 2 வழக்குகளையும் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மே 3-ம் தேதிக்குள் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். 

இதற்கிடையே காவிரி வரைவு செயல் திட்டத்தைத் தாக்கல் செய்ய மேலும் 2 வாரங்கள் அவகாசம் கேட்டு மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இது தமிழகத்தில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் என பலரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கோரி தாக்கல் செய்த மனுவை மத்திய அரசு திடீரென வாபஸ் வாங்கியுள்ளது. தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் ஆட்சேபனை தெரிவித்தை அடுத்து மனு வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மே 3-ம் தேதிக்குள் வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!