வெளியிடப்பட்ட நேரம்: 19:54 (28/04/2018)

கடைசி தொடர்பு:19:54 (28/04/2018)

மோடி மனதில் என்ன உள்ளது... பி.ஜே.பி-யினருக்கு எதிராக வாய் திறப்பாரா?

பிரதமர் மோடி வானொலி உரை

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றி பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

அவ்வப்போது நாட்டில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மோடியின் உரை இடம்பெறுவது வழக்கம். பணவீக்கப் பிரச்னை, பழைய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற தருணங்களில் அப்போதையச் சூழல் குறித்து தன் உரையில் குறிப்பிட்டுப் பேசுவார் பிரதமர்.

தற்போது நாட்டில் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ள நிலையில், மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் ஏப்ரல் 29-ம் தேதி உரையாற்ற உள்ளார். இது பிரதமர் மோடியின் 43-வது மனதின் குரல் நிகழ்ச்சியாகும். நாடு முழுவதும் உள்ள அனைத்து வானொலி நிலையங்களும், பிரதமர் மோடியின் இந்த உரையை ஒலிபரப்பும், மேலும் தூர்தர்ஷன் அலைவரிசைகளிலும் பிரதமரின் உரை இடம்பெறும். ஹிந்தியில் பிரதமர் பேசி முடித்ததும், அவருடைய உரையின் மாநில மொழியாக்கமும் இடம்பெறும்.

ஜி.எஸ்.டி. அமல், நாட்டின் பல்வேறு இடங்களிலும் அவ்வப்போது நிகழும் முக்கிய நிகழ்வுகள், மிகப்பெரிய விபத்துகள் உள்ளிட்ட சம்பவங்களைக் குறிப்பிட்டும், அரசின் நடவடிக்கை பற்றியும் மோடி தன் பேச்சில் எடுத்துரைப்பார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கத்துவா என்ற இடத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது, உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் என்ற இடத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது போன்ற கொடூரச் செயல்களில் பி.ஜே.பி-யினருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். அதிலும் உன்னாவ் சம்பவத்தில் பி.ஜே.பி. எம்.எல்.ஏ. ஒருவரே கைது செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், சீனா சென்று விட்டு தாயகம் திரும்பியுள்ள பிரதமர் மோடி, இந்த முறை மனதின் குரல் நிகழ்ச்சியில் பாலியல் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் பற்றி பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பி.ஜே.பி-யினர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி மோடி வாய் திறப்பாரா என்று பல்வேறு தரப்பினரும் எதிர்நோக்கியுள்ளனர்.

மோடி - அமித் ஷாமே 1-ம் தேதி முதல் கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பி.ஜே.பி. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்யவிருக்கிறார் மோடி. பி.ஜே.பியினர் முக்கியமான சில பிரச்னைகளில் தேவையில்லாத கருத்துக்களைத் தெரிவித்து பிரச்னைகளை மேலும் தீவிரப்படுத்தக்கூடாது என்ற தொனியில் ஏற்கெனவே மோடி எச்சரித்திருந்தார். அதையும் மீறி பி.ஜே.பியினர் தெரிவித்த கருத்துகள் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை, பி.ஜே.பி-யினரின் இதுபோன்ற செய்கைகளை அவர் பெரிதாக கண்டிக்கவில்லை. குற்றம் இழைத்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பொதுவான கருத்தாகவே அவர் கூறியுள்ளார். அதை உடைக்கும் விதமாக சமீபத்தில் மோடி தெரிவித்த கருத்துக்கு சிவசேனா தன் பத்திரிகை மூலம் தாக்கி எழுதியது. இதுமாதிரியான நிகழ்வுகளுக்கு இதுவரை பிரதமர் மோடி உரிய பதிலளிக்கவில்லை.

இது தவிர, காவிரி விவகாரம், தொடர் போராட்டங்கள் என தமிழகத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி தன்னுடைய மாதாந்திர உரையில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் கருத்தாக உள்ளது. அப்படி, இல்லாமல் வழக்கமான 'மனதின் குரல்' நிகழ்ச்சியாகவோ அல்லது கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாகவோ பிரதமரின் உரை இருத்தல் கூடாது என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பும் வேண்டுகோளும் ஆகும். பிரதமர் மனதில் என்ன உள்ளது... அவர் இம்முறை என்ன சொல்லப் போகிறார்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்