'என் எதிர்காலம் யோகி ஆதித்யநாத் கையில்...' - கலங்கும் மருத்துவர் கஃபில்கான் | future plans depend on Chief Minister Yogi Adityanath, says Dr Kafeel Khan

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (29/04/2018)

கடைசி தொடர்பு:13:35 (29/04/2018)

'என் எதிர்காலம் யோகி ஆதித்யநாத் கையில்...' - கலங்கும் மருத்துவர் கஃபில்கான்

குழந்தைகள் இறந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள மருத்துவர் கஃபில்கான், சிறையில் இருந்து வெளியே வந்தவுடன், மனதாலும் உடலாலும் தளர்ந்துபோய் இருக்கிறேன் என்று தனது மனைவியிடம் கூறியிருக்கிறார். 

கஃபில்கான்

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 60-துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தன. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் ஆக்சிஜன் விநியோகம் செய்யும் நிறுவனத்துக்கு, மருத்துவமனை நிர்வாகம் சரிவர பணம் அளிக்காததால் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதாகத் தெரியவந்தது. இதனையடுத்து, மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ராஜீவ் மிஷ்ரா, குழந்தைகள் வார்டு பொறுப்பாளர் டாக்டர். கஃபில்கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

யோகி ஆதித்யநாத்

இந்தச் சம்பவம் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. முன்னதாக, குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற கஃபில்கான் தன்னால் முடிந்தவரை ஆக்சிஜன் சிலிண்டரை வரவழைத்து துரிதமாக செயல்பட்டார். அவர் குற்றமற்றவர் என ஆதரவு எழுந்தது. இருப்பினும், யோகி அரசு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஏழு மாதம் சிறையில் இருந்த அவருக்குக் கடந்த 25-ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இவரின் ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில அரசு மேல்முறையீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், ஜாமினில் விடுதலைப் பெற்று வெளியில் வந்திருக்கும் அவர், 'மனது உடல் உணர்வு ரீதியாகச் சோர்ந்து போய் இருக்கிறேன். பல மாதங்களுக்குப் பிறகு குடும்பத்தினருடன் இருக்கும் இத்தருணத்தை நிம்மதியாக உணர்கிறேன். சம்பவம் நடைபெற்ற அந்த நாளில், ஒரு தந்தையாக என்ன செய்திருக்க முடியுமோ அதனை மருத்துவராக இருந்து செய்தேன். இதற்குப்பின் என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. முதல்வர் எனது இடைநீக்கத்தை ரத்து செய்தால், மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று மக்களுக்குச் சேவை செய்வேன். என் எதிர்கால திட்டங்கள் யோகி ஆதித்யநாத் மீதே சார்ந்துள்ளது' எனத் தெரிவித்தார்.