'காங்கிரஸ் ஒரு நாடகக் கம்பெனி' - அனந்தகுமார் ஹெக்டே விமர்சனம்!

'காங்கிரஸ் கட்சி ஒரு நாடகக் கம்பெனி' என மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே விமர்சித்துள்ளார். 

வரும் மே 12-ம் தேதி, சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிவருகிறது கர்நாடக மாநிலம். இதற்காக அனைத்துக் கட்சிகளும் பிரசாரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அங்கு, தற்போது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதனால், நடைபெற உள்ள தேர்தலில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என எதிர்க்கட்சியான பா.ஜ.க முயன்று வருகிறது. ஏற்கெனவே, அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பாவை அறிவித்துள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்வதற்குத் தேவையான பணிகளைச் செய்துவருகிறது. அதன்படி, அமித் ஷா, மோடி என பா.ஜ.க தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர். 

இந்நிலையில், மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, நேற்று கர்நாடக மாநிலம் கான்பூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது,   ''காங்கிரஸ் ஒரு நாடகக் கம்பெனி. கடந்த 70 ஆண்டுகளாக இந்த நாடகக் கம்பெனிதான் இந்தியாவை ஆண்டது. அவர்கள் எந்த அறநெறியையும் பின்பற்றுவதில்லை. எங்கு செல்ல வேண்டும், என்ன நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என எதுவும் தெரியாது. அவர்களிடம் அதிகாரத்தை அளித்தால் நாடு வளர்ச்சியடையாது. எதிர்காலத்தில் இந்த நாடகக் கம்பெனி நம் நாட்டில் இருக்கக் கூடாது. இந்து மதம் என்று ஒரு மதம் இருக்கிறது என்பதை தற்போது ராகுல் காந்தி உணர்ந்துள்ளார். அதனால்தான், அவர் கோயில்களுக்குச் சென்றுவருகிறார். யாரோ ஒருவரின் ஆலோசனையில்தான் அவர் கோயிலுக்குச் செல்கிறார். காங்கிரஸுக்கு இந்துக்கள் மற்றும் இந்துத்துவ நலன்களைப் பற்றி அக்கறை இல்லை" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!