வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (30/04/2018)

கடைசி தொடர்பு:18:01 (30/04/2018)

ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் இந்தியா இழக்கும் உயிர்கள்! #VikatanInfographics

நாடு முழுவதும் ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகளே இல்லாத நிலையை ஏற்படுத்துவோம்' என்று ரயில்வே துறை சொல்லிக் கொண்டிருந்தாலும், அதனை சீக்கிரம் செயல்படுத்துங்கள் என்பதே நம்முடைய வேண்டுகோள். குறைந்தபட்சம், அதுபோன்ற பகுதிகளில் மக்களின் பாதுகாப்பையாவது உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் நடந்தது போன்ற விபத்து இனிமேலும் தொடராமல் இருக்கட்டும்...

ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் இந்தியா இழக்கும் உயிர்கள்! #VikatanInfographics

த்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் குஷி நகர். ஏப்ரல் 26-ம் தேதி காலை 7 மணியளவில் 'டிவைன் பப்ளிக்' பள்ளியைச் சேர்ந்த வாகனம் ஒன்று, 25 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, கோரக்பூர் வழியாக ஷிவான் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், விஸ்வபுரா காவல் நிலையத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள பாக்புர்வா என்ற இடத்தை அடைந்தது. அங்குள்ள ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை மாணவர்களை ஏற்றி வந்த வேன் கடந்தபோது, ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், எட்டு மாணவர்கள் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

உத்தரப்பிரதேச விபத்து

இதுபோன்று ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை கடக்கும் வாகனங்களில் ரயில்கள் மோதி ஏற்படும் விபத்து முதல்முறையல்ல. ஓர் ஆண்டில் ரயில்வே தண்டவாளங்களைக் கடக்கும்போது ஏற்படும் விபத்துகளில் 40 சதவிகிதம் ஆளில்லா கிராஸிங்குகளில்தாம்  ஏற்படுகின்றன.

இந்தியாவில் ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக 'மிஷன் ஜீரோ' என்னும் திட்டம் தொடங்கப்பட்டு, ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகளில், மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2013-2014- ம் ஆண்டில் 64 சதவிகிதமாக இருந்த ரயில்வே கிராஸிங்குகளில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை, 2016-2017- ம் ஆண்டில் 16.81 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர் ரயில்வே அதிகாரிகள். 

என்றாலும் இந்த நடவடிக்கைகள் ரயில்வே விபத்துகளை முழுவதுமாகத் தடுக்கும் வகையில் இல்லை. விபத்துகள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் இதுபோன்று, 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 18 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. ரயில்களைப் பொறுத்தவரை, சராசரியாக 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுவதால், பேருந்துகள், கார்கள் போன்ற இதர வாகனங்களைப் போன்று உடனடியாகத் திடீரென்று பிரேக் உபயோகித்து நிறுத்த முடியாது. அப்படிச் செய்தால் ரயில் தடம் புரண்டு, மிகப்பெரிய விபத்துகளைச் சந்திக்க நேரிடும் என்பதால், இதுபோன்ற ரயில்வே கிராஸிங்குகளில் ஏற்படும் விபத்துகளை முற்றிலுமாகக் குறைக்க முடிவதில்லை என்கின்றனர் ரயில்வே ஊழியர்கள்.

கடந்த 2012- ம் ஆண்டில் ஏற்பட்ட 53 ரயில்வே கிராஸிங் விபத்துகளில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்தனர். ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற விபத்துகளும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன என்பது  வேதனையளிக்கக்கூடிய விஷயமே.

விபத்து

'ஒரு வருடத்திற்குள் ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகள் அனைத்தையும் மூட வேண்டும்' என்று கடந்த ஆண்டு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டார். அதேபோல், இஸ்ரோ உதவியுடன் ஆளில்லா ரயில்வே கிராஸிங் உள்ள பகுதிகளில் எச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்தது. என்றாலும், நாடு முழுவதும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. 

ஒவ்வொரு வருடமும் ஆயிரத்துக்கும் அதிகமான பகுதிகளில் ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகள் அகற்றப்படுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் 6,169 இடங்களில் அவை அகற்றப்பட்டுள்ளன. வரும் 2020- ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 4,943 ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகளை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியத்தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 2017- ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மேற்கு ரயில்வேயில் அதிகபட்சமாக 48.07% ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகள் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதன்படி, தமிழகத்தில் மட்டும் 444 இடங்களில் ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகள் உள்ளன. ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் இந்த எண்ணிக்கை 300-க்கும் குறைவாகவே இருக்கின்றன.

ஒவ்வொரு வருடமும் மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு, பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவாக நடப்பாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014- ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை வாகனத்தில் கடக்க முயன்ற அம்மாநில அமைச்சர் சதாய் ராம் யாதவ் மற்றும் அவரது உதவியாளர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 ஆளில்லா ரயில்வே கிராஸிங்

தமிழகத்தின் காஞ்சிபுரத்தில், கடந்த 2007- ம் ஆண்டு ஆளில்லா ரயில்வே கிராஸிங்கைக் கடக்க முயன்ற வேன் மீது ரயில் மோதி கிராம நிர்வாக அதிகாரிகள் ஒன்பதுபேர் உள்பட 11 பேர் பலியானார்கள். மேலும், அதே ஆண்டு அகரம் அருகே புதுப்பாக்கம் என்ற இடத்தில் ஆட்டோ மீது மின்சார ரயில் மோதியதில் 17 பேர் பலியாகினர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்  2014- ம் ஆண்டு ஆளில்லா ரயில்வே கிராஸிங்கைக் கடக்க முயன்ற கார் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி மூன்று பெண்கள் பலியானார்கள். அதே பகுதியைச் சேர்ந்த நெடுங்குளத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் சென்ற ஐந்து பேர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். 'இந்தியா டிஜிட்டல் மயமாகிறது' என்று ஒருபக்கம் நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாலும், ஆளில்லா ரயில்வே கிராஸிங் உள்ள இடங்களில் தடுப்புகள்கூட வைக்க இயலாமல் விபத்துகள் தொடர்ந்து கொண்டிருப்பது கவலையளிக்கக்கூடியதாகவே உள்ளது. 
'நாடு முழுவதும் ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகளே இல்லாத நிலையை ஏற்படுத்துவோம்' என்று ரயில்வே துறை சொல்லிக் கொண்டிருந்தாலும், அதனைச் சீக்கிரம் செயல்படுத்துங்கள் என்பதே நம்முடைய வேண்டுகோள். குறைந்தபட்சம், அதுபோன்ற பகுதிகளில் மக்களின் பாதுகாப்பையாவது உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் நடந்தது போன்ற விபத்துகள் இனிமேலும் தொடராமல் இருக்கட்டும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்