வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (30/04/2018)

கடைசி தொடர்பு:17:00 (30/04/2018)

'சிறுவயதுக் கனவை அடைந்துவிட்டேன்!’ - கான்ஸ்டபிள் டூ ஐபிஎஸ் பயணம் சொல்லும் ராஜஸ்தான் இளைஞர்

தனது 19 வயதில் கான்ஸ்டபிளாகக் காவல்துறையில் பதவியில் சேர்ந்த ராஜஸ்தான் இளைஞர் ஒருவர், 29 வயதில் யூ.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற்று ஐ.பி.எஸ் -ஆகப் பணியில் சேரவிருக்கிறார். 

ராவத்

அண்மையில் சிவில் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்தத் தேர்வு முடிவுகளுடன் பல சுவாரஸ்யச் சம்பவங்களும், நம்பிக்கை அளிக்கக்  கூடிய செய்திகளும் வெளியாகின. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் ராவத். 29 வயதான இவர் இந்தத் தேர்வில் 824 -வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.   

பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரான இவர், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஓர் ஆசிரியர். 3 குழந்தைகள் உள்ள வீட்டில் இரண்டாவதாகப் பிறந்த ராவத், தனது 19 -வது வயதில் காவல்துறையில் கான்ஸ்டபிளாகப் பணியில் சேர்ந்தார். 6 ஆண்டுகள் கான்ஸ்டபிளாகப் பணியாற்றிய அவர், அதன் பின்னர் தனது இளைய சகோதரரும் காவல்துறையில் கான்ஸ்டபிளாகச் சேர, தனது வேலையை உதறினார் ராவத். வீட்டில் மேலும் ஒருவர் பணியில் சேர்ந்ததால் இந்த முடிவை அவர் எடுத்தார். அரசு வேலையை உதறியதால், தன்னைச் சுற்றியிருப்பவர்களால் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார்.
 
கடந்த 2013 -ம் ஆண்டு முதல் கடுமையாகப் படித்த ராவத், 2014 -ல் எழுத்தர் பதவிக்கான தேர்வில் வென்று பணியில் சேர்ந்தார். மேலும், மத்தியப் பாதுகாப்புப் படையில் தேர்வு பெற்று அங்கும் பணிக்குச் சேர்ந்தார். ஆனால், சிவில் தேர்வுகளில் தான் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கனவை நிஜமாக்க அந்த வேலைகளையும் உதறிவிட்டுத் தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகி வந்தார். தேர்வு முடிவுகள் வெளியானது. மனோஜ்குமார் ராவத், 824 -வது ரேங்க் பெற்று தேர்வானார். இவர் ஐ.பி.எஸ் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

இந்த வெற்றிகுறித்துப் பேசும் ராவத், ''காவல்துறையினர் மக்களிடம் அன்பாக, நட்பாக இருக்க வேண்டும். ஐபிஎஸ் ஆக தேர்வு செய்யப்பட்டால், கான்ஸ்டபிளாகப் பெற்ற கள அனுபவத்தை வைத்துச் சிறப்பாகச் செயல்படுவேன்” என்கிறார்.

மேலும் அவர் அம்பேத்கரின் பார்வையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் சமூக நீதி என்ற தலைப்பில் பி.ஹெச்.டி ஆய்வும் செய்து வருகிறார். இந்த ஆய்வுக்காக வழங்கப்பட்ட உதவித்தொகை சிவில் தேர்வுகளுக்குப் பெரும் உதவியாக இருந்ததாகத் தெரிவித்தார்.