வெளியிடப்பட்ட நேரம்: 20:42 (30/04/2018)

கடைசி தொடர்பு:20:42 (30/04/2018)

ராகுல் காந்தி தொடங்கிய பிரசாரம்: காங்கிரஸுக்குச் சாதகமாகுமா 'ஜன் ஆக்ரோஷ்' பேரணி?

ராகுல் காந்தி தொடங்கிய பிரசாரம்: காங்கிரஸுக்குச் சாதகமாகுமா 'ஜன் ஆக்ரோஷ்' பேரணி?

த்தியில் ஆளும் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை, அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்து, காங்கிரஸ் வெற்றிபெறும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்தாண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இப்போதே மத்திய அரசுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். அதன் ஒருபகுதியில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

டெல்லி ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற 'மக்களின் கோபம்' (ஜன் ஆக்ரோஷ்) என்ற பெயரில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ''எதிர்வரும் கர்நாடக மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் மட்டுமன்றி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றிபெறும்" என்றார்.

டெல்லி கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி

ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ''மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே மக்களின் முன் வந்து நீதி கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குத் தப்பியோடி விட்டனர். இதுகுறித்தெல்லாம் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். 2019-ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் மக்களவை பொதுத் தேர்தலில் பி.ஜே,.பி-யைத் தோற்கடித்து காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும்" என்று குறிப்பிட்டார்.

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சியின் சீர்கேடுகளையும், இந்த ஆட்சியில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதையும் ஊழல் அதிகரித்திருப்பதையும் ராகுல் சுட்டிக்காட்டிப் பேசினார். பி.ஜே.பி-யையும், மோடியையும் விமர்சிக்க அவர் தவறவில்லை.

ராகுல் காந்தி மேலும் பேசுகையில், ''கர்நாடக மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி. முதல்வர் வேட்பாளராக ஊழல் வழக்கில் சிறைசென்ற எடியூரப்பாவை நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால், பிரதமர் மோடி, ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறி வருகிறார். சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர், அந்நாட்டு அதிபருடன் டோக்லாம் பதற்றம் குறித்து ஒருவார்த்தைகூடப் பேசவில்லை. காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசுகளில் செயல்பாடுகளையும், தனது அரசின் செயல்பாடுகளையும் மோடி ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வேலைவாய்ப்பின்மை, ஜி.எஸ்.டி. வரி, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பி.ஜே.பி. எம்.எல்.ஏ ஈடுபட்டது ஆகியவைதாம் பிரதமர் மோடி அரசின் சாதனைகள். 

காங்கிரஸ் பேரணியில் தொண்டர்கள்

சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் காங்கிரஸ் கட்சி ஒன்றுபடுத்தியது. ஆனால், மக்கள் மத்தியில் வெறுப்புஉணர்வைப் பரப்புவதுடன், தலித்துகள், சிறுபான்மையினரைத் தாக்கும் செயல்களிலும் பி.ஜே.பி. ஈடுபட்டு வருகிறது. 

விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யாத நிலையில், பெருநிறுவனங்களின் கடன்களை மட்டும் மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளை பிரதமரிடம் நான் எடுத்துக்கூறிய போதிலும், அவர் கண்டுகொள்ளவில்லை. நாட்டின் பாதுகாவலர் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் மோடி, ஊழல், ஜனநாயக அமைப்புகள் வலுவிழக்கச் செய்யப்படும் விவகாரம், நீதிபதி லோயா வழக்கு போன்ற பல்வேறு விவகாரங்களில் மௌனம் சாதிப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.

சோனியா காந்தி பேச்சு

சோனியா காந்திசோனியா காந்தி பேசுகையில், ''பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஊழலின் வேர்கள் வலுப்பெற்று விட்டன. 'நானும் ஊழல் செய்ய மாட்டேன். வேறு யாரையும் ஊழல் செய்ய விடமாட்டேன்' என்று மோடி கூறியது என்னவாயிற்று? இந்த ஆட்சியில் நீதித்துறை இதுவரை இல்லாத அளவில் பிரச்னைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக விசாரணை அமைப்புகளை பி.ஜே.பி. அரசு பயன்படுத்துகிறது. பி.ஜே.பி. அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படாததால், மக்கள் கோபத்திலும், ஏமாற்றத்திலும் உள்ளனர். நம் நாடு மோசமான காலகட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. ஒடுக்கப்பட்டோரின் குரல் நசுக்கப்படுவதுடன் தேர்தல் ஆதாயத்துக்காக மக்களிடையே வெறுப்புஉணர்வு பரப்பப்படுகிறது. ஊடகங்களும் சுதந்திரமாகப் பணியாற்ற முடியவில்லை. ஓர் அமைப்பின் (ஆர்.எஸ்.எஸ்) கட்டளைக்குக் கட்டுப்பட்டு இதுபோன்ற செயல்களில் மத்திய பி.ஜே.பி. அரசு ஈடுபடுகிறது. மக்கள் விரோத மோடி அரசுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க ராகுலின் தலைமையில் நாம் ஒன்றிணைய வேண்டும்" என்றார். 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ''பி.ஜே.பி. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. '2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்' என்று தெரிவித்த மோடியின் வாக்குறுதி என்னவாயிற்று? பெண்கள், சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டன. மோடி அரசு செயல்படும் விதத்தைப் பார்க்கும்போது ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. நீதித்துறை உள்பட அரசமைப்புச் சட்டரீதியான அமைப்புகள் இந்த ஆட்சியில் அவமதிக்கப்படுகின்றன" என்று பேசினார்.

மன்மோகன் சிங்நாட்டின் கொள்கைகளுக்கும், கலாசாரத்திற்கும் பி.ஜே.பி. தீங்கிழைத்துக் கொண்டிருக்கிறது என்றும், இந்தியாவில் மாற்றம் உருவாவதற்கான தருணம் வந்துள்ளது என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி-யுமான ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, பெட்ரோல், டீசலின் விலையை தினந்தோறும் மாற்றியமைத்தல் போன்ற மத்திய பி.ஜே.பி. அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் நாடு முழுவதும் மக்கள் ஏமாற்றமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி, மத்திய அரசின் மீதான வெறுப்பை சாதகமாக்கிக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்கள் மட்டுமல்லாது அனைவரிடமும் எழுந்துள்ளது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சி, விரக்தியடைந்துள்ளதாகவும், 20 மாநிலங்களில் பி.ஜே.பி. ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், தேர்தல் தோல்வி காரணமாக அக்கட்சி பி.ஜே.பி மீது குற்றம்சாட்டுவதாகவும், தமிழக பி.ஜே.பி-யினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பி.ஜே.பி - காங்கிரஸ் மோதல் ஒருபுறம் இருந்தாலும், மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான்...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்