வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (01/05/2018)

கடைசி தொடர்பு:11:15 (01/05/2018)

மோடி குறித்து விமர்சனம்! - ஜிக்னேஷ் மேவானி, பிரகாஷ் ராஜ் மீது அவதூறு புகார்

பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதால் குஜராத் மாநில எம்.எல்.ஏ மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது அவதூறு புகார்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜிக்னேஷ் மேவானி

கர்நாடகாவில் வரும் மே 12-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அந்த மாநிலமே பெரும் பரபரப்பாகக் காணப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியதாகக் கூறி கர்நாடக மாநிலப் பா.ஜ.க, குஜராத் மாநில எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது அவதூறு புகார் அளித்துள்ளது. 

பா.ஜ.க அளித்துள்ள புகாரில், ‘கடந்த ஏப்ரல் 29-ம் தேதி பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி மற்றும் எடியூரப்பாவை அவதூறாகப் பேசியதாகக் கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடியைக் கார்ப்பரேட் விற்பனையாளர், நாட்டை சூறையாடியத் திருடன் எனப் பேசியதாகக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் பிரதமர் மீதான பொய்யான கருத்துகளை விதைத்து அவரின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், இவர்கள் கர்நாடகத் தேர்தல் முடியும் வரை அங்கு நடக்கும் எந்தக் கூட்டத்திலும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது’ எனப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.