வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (02/05/2018)

கடைசி தொடர்பு:00:00 (02/05/2018)

'போக்ஸோ வழக்குகளை விரைவுபடுத்துங்கள்!’ - உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தவும், நேரடியாகக் கண்காணிக்கவும் நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

உச்ச நீதிமன்றம்

குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி வரும்நிலையில், 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு அதிகபட்ச தண்டணையாக மரண தண்டனை விதிக்கப்படும் வகையில் போக்ஸோ சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இந்த சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார்.  

இந்தநிலையில், நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள போக்ஸோ வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தக் கோரி அலோக் ஸ்ரீவத்சவா என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், போக்ஸோ வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துமாறு நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அதுபோன்ற வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் விசாரிப்பதை உறுதிப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், இதுதொடர்பான வழக்குகளில் உரிய காரணங்கள் இன்றி ஒத்திவைப்பு கூடாது என கீழ் நீதிமன்ற நீதிபதிகளை அறிவுறுத்தும்படியும் உயர் நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.