வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (02/05/2018)

கடைசி தொடர்பு:13:25 (02/05/2018)

பட்டியல் இனத்தவர் வீட்டில் டின்னர்; அமைச்சர் சாப்பிட்டது ரெஸ்டாரென்ட் உணவு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைச்சர் ஒருவர், பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் இரவு உணவை சாப்பிட்டார். ஆனால், அங்கு அவர் சாப்பிட்ட உணவு வகைகள் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சர்ச்சையில்  உபி அமைச்சர்

Photo Credit: ANI

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, பட்டியல் இன சமூகத்துக்கு எதிராகச் செயல்படுவதாகத் தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், திடீரென பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கந்தாபூர் கிராமத்துக்கு விசிட் அடித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அங்கு ஒரு பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவர் வீட்டில் உணவும் உண்டார். எனினும் நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்தே இவ்வாறு செயல்படுவதாக நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். 

சர்ச்சையில்  உபி அமைச்சர் இந்நிலையில் அம்மாநில அமைச்சர் சுரேஷ் ரானா, அலிகார் மாவட்டத்தில் உள்ள லோஹாகாத் கிராமத்தில் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த ரஜ்னிஷ் குமார் சிங் என்பவர் வீட்டில் திங்கள்கிழமை இரவு உணவை உண்டார். அவருடன் மேலும் சில பா.ஜ.க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். ஆனால், அங்கு அவர்கள் வீட்டில் சமைக்கப்பட்ட உணவையோ, அவர்கள் வீட்டில் உள்ள தண்ணீரையோ உண்ணவில்லை. 

இது குறித்து ரஜ்னிஷ் குமார் பேசுகையில், ‘அமைச்சர் வருவது குறித்து எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால், நடந்தவை எல்லாம் தகுந்த முன்னேற்பாட்டுடன் நடந்தது. என்னை வீட்டில் அமரச் சொன்னார்கள். உணவு வகைகள் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டது. மினரல் பாட்டில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இறுதியாக என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்’ என்றார். 

அமைச்சரின் டின்னருக்காக ரஜ்னிஷ் குமார் வீட்டுக்கு டால் மக்னி, மட்டர் பன்னீர், தந்தூரி ரொட்டி, குலாப் ஜமூன் போன்ற பல உணவு வகைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன.