வெளியிடப்பட்ட நேரம்: 19:04 (02/05/2018)

கடைசி தொடர்பு:19:04 (02/05/2018)

பி.ஜே.பி.யைத் தூக்கியெறியத் திட்டமா? - தி,மு.க.வின் கூட்டணிக் கணக்கு என்ன?

த்தியில் ஆளும் பி.ஜே.பி மீது கூட்டணிக் கட்சிகள் உட்பட சில மாநிலக் கட்சிகளும் நீண்ட காலமாக அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன. அண்மையில் காஷ்மீர் சிறுமி மீதான வன்புணர்வு விவகாரத்தின்போது ஜம்மு காஷ்மீர் ஆளும் கட்சியும் பி.ஜே.பி-யின் கூட்டணிக் கட்சியுமான மக்கள் ஜனநாயகக் கட்சி, பி.ஜே.பி -யினர் மீது வலுவான அதிருப்தியை வெளிப்படுத்தியது இதற்கு உதாரணம். இந்த விவகாரத்தால், காஷ்மீரில் அமைச்சரவை மாற்றம் வரை சென்றதையும் இங்கே நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். 2019 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில், மாநில அளவிலான முக்கியக் கட்சிகளின் தலைவர்கள்  சிலர் தொடர்ந்து சந்தித்து வரும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

சந்திரசேகர ராவ்

திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அண்மையில் சந்தித்தார். இருமாநிலத்தை ஆளும் முதல்வர்கள் சந்தித்துக் கொண்டார்கள் என்கிற அடிப்படையில் இந்தச் சந்திப்பை நோக்கினாலும், தமிழகத்தில் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வின் செயல்தலைவர் ஸ்டாலினையும் கட்சியின் தலைவர் கருணாநிதியையும் அவர்களது இல்லத்துக்கே நேரில் சென்று சந்திரசேகர ராவ் சந்தித்தது மத்திய மற்றும் மாநில அரசியல் வட்டாரத்தில் அனைவரையும் உற்றுநோக்க வைத்துள்ளது. கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா கொண்டாட்டத்தில், பி.ஜே.பி தவிர அனைத்துத் தேசியக் கட்சிகளின் தலைவர்களை ஒரே மேடையில் ஸ்டாலின் ஒருங்கிணைத்ததை இங்கே நினைவுகூர வேண்டும். 1996 ல் தேவ கவுடா பிறகு ஐ.கே.குஜ்ரால் என மத்தியில் மூன்றாவது அணி ஆட்சியைப் பிடிக்க கருணாநிதி ஒரு முக்கியக் காரணமாக இருந்தார். அதற்கு காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவுக் கரம் நீட்டியது... என்றாலும் எந்த ஒரு மாநில முதல்வரும் அண்டை மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவரைச் சென்று சந்திப்பது என்பது அரிதாகவே நிகழும் விஷயம். சென்னையில் கருணாநிதியின் இல்லத்துக்கு வந்து சந்தித்த சந்திரசேகரராவ், மதியம் ஸ்டாலின் வீட்டில் உணவு உண்டது 1996 ம் வருடத்தின் தாக்கத்தை மீண்டும் மத்தியில் ஏற்படுத்துமா என்று எதிர்பார்க்க வைத்துள்ளது.

சந்திரசேகர் ராவ் கருணாநிதி ஸ்டாலின்

ஆனால், ஸ்டாலின் தரப்பு மூன்றாவது அணி தொடர்பான எவ்வித ஊகத்தையும் தற்போது மறுத்துள்ளது. தி.மு.க. உட்கட்சி வட்டாரங்கள் இதுகுறித்துக் கூறுகையில், ''தேர்தல் கூட்டணி தொடர்பாக இவ்வளவு விரைவிலேயே முடிவெடுக்க முடியாது. ஆனால், இருவருக்கும் இடையிலான சந்திப்பு தேர்தல் கூட்டணி என்பதைக் கடந்து அரசியலை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது. மாநில சுயாட்சி, மதச்சார்பற்ற கொள்கைகள், பொருளாதாரம் உள்ளிட்ட மாநிலம் தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. மத்தியில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பெரும்பான்மை இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், தேசிய அளவிலான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு கழகத்தின் கரங்கள் என்றுமே அத்தியாவசியமாக இருக்கிறது. இதனைக் கூட்டணிக்கான அச்சாரமாக எடுத்துக்கொள்ளாமல், மத்தியில் இருக்கும் ஏகாதிபத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிரான ஒருங்கிணைந்த எதிர்ப்புக் குரலாகவே பார்க்க வேண்டும்” என்கின்றனர். 

மூன்றாவது அணிக்கான அச்சாரம் குறித்து கருத்து கூறியிருக்கும் காங்கிரஸ் தரப்பு, ''மத்தியில்தான் பி.ஜே.பி-க்கு நாங்கள் எதிர்க்கட்சி; மற்றபடி பெரும்பாலான மாநிலங்களில் அந்தந்த மாநிலக் கட்சிகளைத்தான் பி.ஜே.பி எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. இந்நிலையில் இப்படியாக அத்தனை கட்சிகளும் ஒருங்கிணைந்து பி.ஜே.பி-க்கு எதிராகக் குரல் கொடுப்பதென்பது வரவேற்கத்தக்கது” என்கின்றனர். 


டிரெண்டிங் @ விகடன்