''தேர்வு இடைவேளையில்கூட, சிகிச்சை எடுத்துக்கொண்டேன்!”- யூபிஎஸ்சி தேர்வில் வென்ற செளமியா ஷர்மா! | Sowmya Sharma ranks 9th in upsc exam despite her hearing disability

வெளியிடப்பட்ட நேரம்: 19:33 (02/05/2018)

கடைசி தொடர்பு:19:33 (02/05/2018)

''தேர்வு இடைவேளையில்கூட, சிகிச்சை எடுத்துக்கொண்டேன்!”- யூபிஎஸ்சி தேர்வில் வென்ற செளமியா ஷர்மா!

ஒவ்வொரு வெற்றியாளர்களுக்கும் அவர்களின் தன்னம்பிக்கையும் மனவலிமையையும் சோதிக்கும் காலம் வரும். அப்படிப் பல சறுக்கல்களைத் தாண்டி, இன்று நம்முன் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகக் கம்பீரமாக நிற்கிறார் செளமியா ஷர்மா!

''தேர்வு இடைவேளையில்கூட, சிகிச்சை எடுத்துக்கொண்டேன்!”- யூபிஎஸ்சி தேர்வில் வென்ற செளமியா ஷர்மா!

செளமியா ஷர்மா

PC: .insightsonindia.com

மீபத்தில், 2017 ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளிவந்தன. பொதுவாக, இந்தத் தேர்வு முடிவுகள் வெளிவரும் சமயம், நமக்குள் மிகப்பெரிய தன்னம்பிக்கையும், நம்மை நெகிழவைக்கும் பல நிஜக் கதைகளையும் ஒவ்வொரு வெற்றியாளர்களிடமிருந்தும் நாம் அறிந்துகொள்ளலாம். அப்படி ஒரு தன்னம்பிக்கை மனிதிதான், டெல்லியைச் சேர்ந்த செளமியா ஷர்மா! தன் முதல் முயற்சியிலேயே, சிவில் சர்வீஸ் தேர்வில் இந்தியளவில் 9 ம் இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

ஒவ்வொரு வெற்றியாளர்களுக்கும் அவர்களின் தன்னம்பிக்கையும் மனவலிமையையும் சோதிக்கும் காலம் வரும். அப்படிப் பல சறுக்கல்களைத் தாண்டி, இன்று நம்முன் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகக் கம்பீரமாக நிற்கிறார் செளமியா ஷர்மா!   

''நான் இந்த வெற்றிக்காக ஒரு வருடம் கடுமையாக உழைத்திருக்கிறேன். நான் இரண்டு இலக்க ரேங்கில் வருவேன் என்று நினைத்தேன். ஆனால், ஒன்பதாம் இடத்தைப் பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. முதல்நிலை தேர்வு எழுதுவதற்கு நான்கு மாதங்கள் முன்புதான் அந்தத் தேர்வுக்காகத் தயாராகத் தொடங்கினேன். அப்போது, நான் டெல்லி தேசியச் சட்டப் பல்கலைக்கழகத்தில் என்னுடைய இறுதி செமிஸ்டரைப் படித்துக்கொண்டிருந்தேன். சட்டக் கல்லூரி மாணவி என்பதால், சட்டம் தொடர்பான விஷயங்கள் அனைத்தும் எனக்கு அத்துப்படி.   

அதன் பிறகு, மெயின் எக்ஸாம், நேர்முகத் தேர்வு! நான் இந்தத் தேர்வுக்குத் தயாராகத் தொடங்கியதிலிருந்தே டிவி, சமூக வலைதளங்கள், வாட்ஸ் அப் ஆகிய அனைத்துக் கேளிக்கைகளிலிருந்தும் விலகிவிட்டேன். என் வீட்டில் உள்ளவர்களும் எனக்காக இவற்றையெல்லாம் பயன்படுத்துவதை குறைத்துகொண்டு மிகப்பெரிய பலமாக இருந்தனர். ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி, மெயின் எக்ஸாம் நடக்கவிருந்த வாரம், என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்று. அப்போது நான் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தேன். 102 டிகிரிக்குக் கீழ் என்னுடைய உடல் தட்பவெப்பம் குறையவே இல்லை. சில சமயங்களில், 103 டிகிரியைக்கூட தொடும். அப்போது நாளொன்றுக்கு மூன்று முறைகூட 'டிரிப்ஸ்'  ஏற்றியிருக்கிறார்கள் என் மருத்துவர்கள். தேர்வு எழுதும் சமயத்தில்கூட, உணவு இடைவேளையின்போது, டிரிப்ஸ் ஏற்றிக்கொண்டு தேர்வு எழுதுவதற்கு முன்பு சாக்லேட் சாப்பிட்டு என்னை ஓரளவுக்குத் தேற்றிக்கொண்டே தேர்வு எழுதி முடித்தேன்'' என்று விவரிக்கும் சௌமியா, 16 வயதில் செவித்திறனை முற்றிலுமாக இழந்தவர்.

செளமியா ஷர்மா

PC: youtube.com

''எனக்கு 16 வயதிருக்கும். அப்போது, என் செவித்திறனை நான் முற்றிலுமாக இழந்தேன். அதற்கான சரியான காரணம் என்னவென்று இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. என்னுடைய திறன்களில் ஒன்றை நான் இழந்துவிட்டேன் என்கிற கசப்பான உண்மையைச் சில வருடங்கள்வரை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதன்பிறகு, மெள்ள மெள்ள அந்த உண்மையை நான் ஏற்றுக்கொண்டேன். அதன்பிறகு, கேட்கும் திறன் கருவியை நான் பொருத்திக்கொண்டேன்”, என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் செளமியா. 

ஆனால், செளமியா தன்னை மாற்றுத் திறனாளிகளாகக் கருதாமல், இந்தத் சமுதாயத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கும் திறமைசாலியாகவே தன்னை எப்போதும் உணர்ந்தார் என்பதற்கு, கடந்த 2016 ம் ஆண்டு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இவர் அளித்த மனு ஓர் உதாரணம். டெல்லி  நீதித்துறை பணிகளில் இணைவதற்கான தேர்வுகளில் ( Delhi juidicial services), மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள்,  பார்வையற்றவர்களுக்கும், கை,கால்களில் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே இருந்தன. இதனை, செவித்திறன் குன்றியவர்களுக்கும் தரவேண்டும் என்று கோரி, ஏப்ரல் மாதம் 2016ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார் சௌமியா ஷர்மா. இந்த மனுவை ஏற்று, கடந்த டிசம்பர் 2017 ம் ஆண்டு, செவித்திறன் குன்றியவர்களுக்கும் அந்தத் சலுகைகள் அளிக்கப்படும் என்று தெரிவித்தது, டெல்லி உயர் நீதிமன்றம்!

தற்போது சிவில் சர்வீஸ் தேர்வில் மிகப்பெரிய வெற்றி கண்டிருக்கும் செளமியா ஷர்மா, மேலும், இதுபோன்ற பயனுள்ள மாற்றங்களை டெல்லியில் கொண்டு வருவேன் என்று தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்