''தேவகவுடாவுடன் பி.ஜே.பி ரகசிய உறவா?" மோடி பாராட்டியதன் பின்னணி என்ன? | Will BJP have secret relationship with Devegowda? The back ground of Modi's praise!

வெளியிடப்பட்ட நேரம்: 20:13 (02/05/2018)

கடைசி தொடர்பு:20:13 (02/05/2018)

''தேவகவுடாவுடன் பி.ஜே.பி ரகசிய உறவா?" மோடி பாராட்டியதன் பின்னணி என்ன?

பிரதமர் மோடி- கர்நாடக தேர்தல் பிரசாரம்

ர்நாடக மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, பி.ஜே.பி. வேட்பாளர்களை ஆதரித்தும், காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தும் பேசியுள்ள அதே நேரத்தில், முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தலைவருமான ஹெச்.டி.தேவகவுடாவைப் பாராட்டிப் பேசியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்புள்ளதாகவும், தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், தேர்தலுக்குப் பின்னர், ஆட்சி அமைவதில் முக்கியப் பங்காற்றும் என்றும் கருத்துக் கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில், மோடியின் இந்தப் பேச்சு குறிப்பிடத்தக்க ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. தவிர, அடுத்தாண்டு மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கர்நாடகத்தில் பெறும் வெற்றி, அந்தத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படும் என்பதால், பி.ஜே.பி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மிகத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தேவேகவுடாவுடன் பிரதமர் மோடி

உடுப்பியில் நடைபெற்ற பி.ஜே.பி. பேரணியில் பேசிய பிரதமர் மோடி, ''முன்னாள் பிரதமர் தேவகவுடாவை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது அவரின் அகந்தையை வெளிப்படுத்துவதாக உள்ளது. நான் மிகவும் மதிக்கக்கூடிய ஒரு தலைவர் தேவகவுடா. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன் தேர்தல் பேரணியில் தேவகவுடா பற்றி, ராகுல் காந்தி பேசியவிதம் நாகரிகமற்ற வகையில் இருந்தது" என்றார்.

''மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி மற்றும் அக்கட்சியின் தலைவர் தேவகவுடா மீது பிரதமர் மோடிக்கு ஏன் திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது? காங்கிரஸ் கட்சியை கர்நாடகத் தேர்தலில் வீழ்த்துவதற்காக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் மோடி இப்போதே ரகசிய உறவு வைத்துக் கொண்டுள்ளாரா?" என்பன போன்ற கேள்விகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சி.மகேந்திரனிடம் பேசினோம்.

சி.மகேந்திரன் - இந்தியக் கம்யூனிஸ்ட்''அரசியல் நாகரிகம் அல்லது அரசியல் நெறி என்பதை அடிப்படையில் தகர்க்கக்கூடியது பி.ஜே.பி-யும், அதற்குத் தலைமை தாங்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பும். அதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும். ரொம்பக் குறைவான எண்ணிக்கையில் பி.ஜே.பி. வெற்றிபெற்று, பிறகு குதிரைப் பேரங்களின் மூலமாக சிறுபான்மையைப் பெரும்பான்மையாக்குவது, ஏற்கெனவே கடந்த காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளாக உள்ளன. அஸ்ஸாம், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் பி.ஜே.பி-யின் இதுபோன்ற குதிரைபேரங்கள் நடந்தேறின. அதற்கு எந்தவித வெட்கமும் இல்லாமல், ஜனநாயக மரபுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அருவருப்பைத் தரக்கூடிய ஒரு வெற்றியைப் பெறுவதற்கு, இப்படிப்பட்ட தந்திரங்களைக் கடைப்பிடிப்பதில் கடந்த காலங்களில் எந்தவிதமான கூச்சமோ, தயக்கமோ பி.ஜே.பி-க்கு இருந்ததில்லை. 

அதேபோல், கர்நாடக மாநிலத்திலும் இப்போதே மதச்சார்பற்ற கட்சிக்கு ஒரு தூண்டில் போட்டு, தேவகவுடாவை இழுத்து, காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்கச் செய்வதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபடுவார் என்றால், அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை. ஆனால், இதுபோன்ற செயல்களின் மூலம் பி.ஜே.பி. அல்லது பிரதமர் மோடியின் நம்பகத்தன்மை ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் எதிர்காலத்தில் சுத்தமாக எடுபடாமல் போகும். என்றாலும் பி.ஜே.பி-யினரைப் பொறுத்தவரை, இதுபோன்ற தகிடுதத்தங்களை எந்தவிதத் தயக்கமோ, கூச்சமோ இல்லாமல் செய்யக்கூடியவர்கள்தான்" என்றார்.

மேலும் அவரிடம், ''கர்நாடக மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவு, அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்குமா?" என்று கேட்டபோது, ''நாடாளுமன்றத் தேர்தலுக்காகத்தான், நடக்கக்கூடிய சட்டமன்றத் தேர்தல்களில் எல்லாம் வெற்றிபெற்றது போன்ற தோற்றத்தை பி.ஜே.பி. தொடர்ந்து காண்பித்து வருகிறது. மாநிலங்களில் வெற்றிபெறுவது, சம்பந்தப்பட்ட மாநில மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லாமல், நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக, அந்த வெற்றிகளை பி.ஜே.பி. கணக்குப் போடுகிறது. மாநில மக்களுக்கான தேவைகள், அவர்களின் பிரத்யேகப் பிரச்னைகள் பற்றியெல்லாம் அக்கட்சிக்குக் கவலையில்லை.

நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து, மாநிலங்களில் தவறான கூட்டணிகளை அமைத்தல், தவறான பிரசாரம் செய்தல், மக்களிடையே மோதல்களை உருவாக்குதல் போன்ற செயல்களில் பி.ஜே.பி. தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டுதான் உள்ளது. அத்தகைய மோதல்களினால் மாநிலங்களில் ஏற்படக்கூடிய அழிவைப் பற்றி அக்கட்சிக்குக் கவலையில்லை. 

அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தமட்டில், ஒட்டுமொத்த சமூகப் பொருளாதாரச் சூழல் என்பது எந்தவிதத்திலும் பி.ஜே.பிக்குச் சாதகமாக இருக்காது. ஏனென்றால், தற்போது நாடு இரு பிரிவாகப் பிரிந்து கிடக்கிறது. ஒன்று, நாட்டினுடைய வருமானத்தின் பெரும்பகுதி கார்ப்பரேட் நிறுவனங்களின் எல்லைக்குப் போய் விட்டது. மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்தும் மறுக்கப்படுகிறது. அதை மூடி மறைப்பதற்காகவே மத்திய பி.ஜே.பி,. அரசு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற விதவிதமான நாடகங்களைக் காட்டி, பி.ஜே.பி. அரசு தன்னுடைய தவறுகளை மறைக்கப்பார்க்கிறது.

இன்னொரு பக்கம் மதக்கலவரத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். பி.ஜே.பி. அரசு குதர்க்கமாக உருவாக்கக்கூடிய குழப்பங்களையும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இவர்கள் வழங்கக்கூடிய எல்லையில்லா சலுகைகளையும் மூடி மறைப்பதற்காகவே மதக்கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால், அவர்களின் அதுபோன்ற தந்திரம் மக்கள் மத்தியில் எடுபடாமல், அம்பலப்படுவதுடன், அவர்கள் என்னதான் சதி செய்தாலும், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யால் வெற்றிபெற முடியாது" என்றார் உறுதியுடன்.

என்றாலும், தேவகவுடாவை பிரதமர் மோடி பாராட்டிப் பேசியதன் உண்மையான பின்னணி என்ன என்பது கர்நாடக மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே தெரியவரும்...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்