ஆளுநர் மாளிகையில் மாயமான சந்தன மரங்கள்! வித்யாசாகர் ராவ் அதிர்ச்சி

மகாராஷ்ட்ராவில், ஆளுநர் மாளிகையில் இருந்த 4 சந்தன மரங்கள், மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் மாளிகை

தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநரும் மகாராஷ்ட்ராவின் ஆளுநருமான வித்யாசாகர் ராவ் இருக்கும் புனே ராஜ்பவனில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தால் ஆளுநர் அதிர்ச்சியடைந்தார். இந்தத் திருட்டு, கடந்த ஏப்ரல் 30, மே 1-ம் தேதிகளில் நடைபெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆளுநர் மாளிகையில் உள்ள தோட்டத் தொழிலாளி, கடந்த மே 1-ம் தேதியன்று செடிகளுக்குத் தண்ணீர்விடச் சென்றபோது இதைக் கவனித்துள்ளார். உடனே, அவர் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அங்குள்ள சிசிடிவி கேமராவின் உதவியுடன் விசாரணை நடைபெற்றுவருகிறது. 

இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி, “ராஜ் பவனில் இருந்த சுமார் 20,000 ரூபாய் மதிப்புள்ள 4 சந்தன மரங்கள் திருடப்பட்டுள்ளன. ஆளுநர் மாளிகைக்கு அருகில் உள்ள குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்கள் இங்கு வந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. அப்பகுதியில், யாரேனும் சந்தன மரங்களுடன் சென்றார்களா எனத் தேடிவருகிறோம். மேலும், மர்ம நபர்கள் எப்படி உள்ளே நுழைந்தார்கள் என்பதை ராஜ் பவன் உள்ளே இருக்கும் சிசிடிவி கேமரா பதிவின் மூலம் விசாரணை நடத்திவருகிறோம்” எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!