வெளியிடப்பட்ட நேரம்: 17:01 (03/05/2018)

கடைசி தொடர்பு:18:10 (03/05/2018)

சந்தையின் போக்கில் சற்று தொய்வு!

ஒரு பலவீனமான தொடக்கத்துக்குப் பின் நெடுநேரம் தொய்வுடன் இருந்த இந்தியப் பங்குச் சந்தை மதியத்துக்கு மேல் சிறிது சுதாரித்து சில நிமிடங்கள் பாசிட்டிவ் டெரிட்டரியில் கழித்த பிறகு, மீண்டும் துவண்டு இறுதியில் சிறு நஷ்டத்துடன் இன்று முடிவுற்றது.

மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 73.28 புள்ளிகள் அதாவது 0.21 சதவிகிதம் இறங்கி 35,103.14 என முடிந்தது.
தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்ட்டி 38.40 புள்ளிகள் அதாவது 0.36 சதவிகிதம் சரிந்து 10,679.65-ல் முடிவுற்றது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் நேற்று தன்னுடைய மானிட்டரி பாலிசி அறிக்கையை வெளியிட்டபோது வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை. இருப்பினும், பணவீக்கம் பற்றிய அதன் கருத்தின்படி நோக்கினால் அடுத்த வட்டிவிகித உயர்வு ஜூன் மாதத்தில் இருக்கலாம் எனக் கருத இடமிருப்பதால் அமெரிக்கச் சந்தையில் நேற்று ஓர் இறங்குமுகம் காணப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஆசியாவில் பெரும்பாலான சந்தைகள் இன்று மந்த நிலையிலே இயங்கின. மேலும் அமெரிக்க - சீன வர்த்தகப் பேச்சு வார்த்தைகள் தொடங்கியிருக்கும் தருவாயில் முதலீட்டாளர்கள் சற்று நிதானமாகச் செயல்பட விரும்பியதும் இச்சந்தைகளில் பெரிய முன்னேற்றம் இன்று காணப்படாததற்கு ஒரு காரணம்.

இதன் காரணமாகவே ஐரோப்பியச் சந்தைகளிலும் சிறிது வீக்னஸ் தெரிந்தது.

இந்தியச் சந்தையில் காலாண்டு நிதி அறிக்கைகளும் மற்ற கார்ப்பரேட் செய்திகளும் சந்தையின் போக்குக்கு சிறிது தடம் ஏற்படுத்தின.

சமீப தினங்களின் விலையேற்றத்துக்குப் பின் முதலீட்டாளர்கள் சிறிது ப்ராஃபிட் புக்கிங் செய்ததும் சந்தை சற்று கீழறங்கியதற்கு ஒரு காரணம்.

இன்று விலை உயர்ந்த பங்குகள் :

சன் பார்மா    3.6%
பார்தி இன்ஃப்ராடெல் 3.3%
டாடா ஸ்டீல் 2.2%
ஆக்ஸிஸ் பேங்க் 1.8%
ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க்  1.8%
என்.டி.பி.சி  1.8%
ஹிண்டால்க்கோ 1,5%
வேதாந்தா    1.3%
ஆயில் இந்தியா 3.5%


விலை குறைந்த பங்குகள் :

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் 8%
யூ.பி.எல். 3.6%
எய்ச்சேர் மோட்டார்ஸ் 2.3%
கோடக் பேங்க் 2%
இன்டர்குளோப் ஏவியேஷன் 10.6%
சீமென்ஸ் 6.2%
ஐடியா செல்லுலர் 5%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 817 பங்குகள் விலை உயர்ந்தும், 1848 பங்குகள் விலை குறைந்தும், 134 பங்குகள் முந்தைய விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.